தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப்டம்பர் 15 முதல் அமல்! ரூ.18,000 வழங்கும் முத்துலட்சுமி ரெட்டி திட்டம் தொடருமா?
Thai Maman Gold Ring scheme to be implemented from September 15 Will the Muthulakshmi Reddy scheme offering 18000 continue
தமிழக அரசு தாய்-சேய் நலனை மேம்படுத்தும் நோக்கில் புதிய நலத்திட்டமாக “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் மற்றும் குழந்தை பராமரிப்பிற்கு தேவையான பொருட்கள் அடங்கிய “பேபி வெல்கம் கிட்” வழங்கப்படும்.
புதிய தங்க மோதிரத் திட்டம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நலத் திட்டம் தொடருமா என்ற கேள்வி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.18,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதில் ரூ.14,000 நேரடியாக வங்கி கணக்கில் இரண்டு தவணைகளாக செலுத்தப்படுவதுடன், ரூ.4,000 மதிப்பிலான இரண்டு ஊட்டச்சத்து பெட்டகங்களும் வழங்கப்படுகின்றன.
ஊட்டச்சத்து பெட்டகங்களில் இரும்புச் சத்து சிரப், ஹெல்த் மிக்ஸ், பேரீச்சம்பழம், நெய் மற்றும் புரதச்சத்து பிஸ்கட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் இடம்பெறுகின்றன.
அரசு வட்டாரங்கள் தெரிவிப்பதாவது, முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நலத் திட்டம் கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியம், ஊட்டச்சத்து மற்றும் பாதுகாப்பான மருத்துவமனை பிரசவத்தை உறுதி செய்யும் அடிப்படை நலத்திட்டமாகும்.
அதே நேரத்தில், புதிய தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தை மேலும் ஊக்குவிப்பதற்கும், குழந்தை பிறப்பை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கூடுதல் ஊக்கத்திட்டம் மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், தற்போது நடைமுறையில் உள்ள ரூ.18,000 மகப்பேறு நிதியுதவி திட்டமும், ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கும் திட்டமும் தொடர்ந்து செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தங்க மோதிரத் திட்டம், ஏற்கனவே உள்ள தாய்-சேய் நலத் திட்டங்களுக்கு மாற்றாக அல்லாமல், கூடுதல் நலத்திட்டமாகவே செயல்படும் என்று அதிகாரிகள் விளக்குகின்றனர்.
தாய் மற்றும் குழந்தை நலனுக்கான திட்டங்களை விரிவுபடுத்தும் அரசின் முயற்சியாக இந்த புதிய திட்டம் பார்க்கப்படுகிறது.
English Summary
Thai Maman Gold Ring scheme to be implemented from September 15 Will the Muthulakshmi Reddy scheme offering 18000 continue