பரந்தூர் விமான நிலைய திட்டத்தை தாமதப்படுத்தக் கூடாது.. சென்னை பரந்தூர் ஏர்போர்ட் மேட்டரில் உடைந்த உண்மை!
The Parantur airport project should not be delayed The broken truth in the Chennai Parantur airport matter
பரந்தூர் புதிய சர்வதேச விமான நிலையத்திற்கான நில கையகப்படுத்தும் நடவடிக்கையை தமிழக அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள நிலையில், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் (FAIRA) நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பரந்தூர் விமான நிலையத் திட்டம் என்பது வெறும் கட்டுமானத் திட்டமல்ல; தமிழ்நாட்டின் அடுத்த 50 ஆண்டுகால பொருளாதார வளர்ச்சியை தீர்மானிக்கும் மிக முக்கியமான உள்கட்டமைப்பு திட்டம் என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது சென்னை சர்வதேச விமான நிலையம் ஆண்டுதோறும் 2.2 கோடிக்கும் அதிகமான பயணிகளை கையாளும் நிலையில், அதன் செயல்திறன் விரைவில் உச்சத்தை எட்டும் அபாயம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெங்களூர், ஹைதராபாத், டெல்லி, மும்பை போன்ற நகரங்கள் தங்களது விமான நிலையங்களை உலக தரத்தில் விரிவுபடுத்தி வரும் நிலையில், சென்னை வளர்ச்சியில் பின்தங்கிக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
“ஒருகாலத்தில் வளர்ச்சியில் முன்னணியில் இருந்த சென்னை, இன்று பிற நகரங்களுடன் போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. புதிய விமான நிலையத் திட்டம் தொடர்ந்து தாமதமானால், சென்னையின் வளர்ச்சி மேலும் பல ஆண்டுகள் பின்னுக்கு தள்ளப்படும்,” என்று ஹென்றி எச்சரித்துள்ளார்.
அதேநேரத்தில், பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 13 கிராம மக்களின் அச்சங்களும் நியாயமானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, விவசாய நிலங்கள், நீர்நிலைகள், வாழ்வாதாரம் மற்றும் குடியிருப்புகளை இழக்கும் அபாயம் காரணமாக மக்கள் கவலையில் இருப்பதை அரசு மனிதநேயத்துடன் அணுக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
முதல்வர் விஜய், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது போராட்டம் நடைபெற்ற பகுதிகளுக்குச் சென்று விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்ததை ஹென்றி நினைவுகூர்ந்துள்ளார். தற்போது அரசு எடுத்துள்ள ‘Status Quo’ முடிவும் அதே மனிதநேய அணுகுமுறையின் தொடர்ச்சியாகவே பார்க்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
அதே சமயம், திட்டத்தை முழுமையாக கைவிடாமல், மக்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்காக அவர் சில முக்கிய பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளார்:
-
நிலம் வழங்கும் விவசாயிகளுக்கு சந்தை மதிப்பை விட குறைந்தது 3 மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும்
-
பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு மாற்று வீடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும்
-
நிலம் இழக்கும் குடும்பங்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்
-
சுங்கச்சாவடி கட்டண விலக்கு போன்ற சிறப்பு நலத்திட்டங்கள் அறிவிக்க வேண்டும்
-
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீர்நிலைகள் பராமரிப்புக்கு தனி திட்டம் வகுக்க வேண்டும்
-
பொதுமக்களுடன் வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்
“தமிழ்நாட்டின் எதிர்கால பொருளாதாரம், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் உலகளாவிய முதலீட்டு வாய்ப்புகளை கருத்தில் கொண்டு, பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை அரசு துரிதப்படுத்த வேண்டும்” என்றும், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் திட்டத்தை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் டாக்டர் ஆ. ஹென்றி தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
English Summary
The Parantur airport project should not be delayed The broken truth in the Chennai Parantur airport matter