நீட் தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகள் நடத்தப்பட்ட விதம் நாகரிக சமூகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது: முத்தரசன் கண்டனம்..!
The manner in which students were treated at the NEET examination centers has brought shame to civilized society Mutharasan condemns
''நீட் தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகள் நடத்தப்பட்ட விதம் நாகரிக சமூகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.'' என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
நீட் தேர்வு காரணமாக மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கை பாதிக்கப்படுவதால், தமிழ்நாடு நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பள்ளி இறுதி வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்று வரும் மாணவ, மாணவிகள் நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

நீட் தேர்வில்இருந்து தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பாஜக மத்திய அரசு பிடிவாதமாக மறுத்து வருவதால் அரியலூர் அனிதா முதல் மேல்மருவத்தூர் அருகில் உள்ள அகிலி கிராமத்தின் காயத்திரி வரை 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜஸ்தானுக்கு நீட் தேர்வு எழுத வந்த மாணவி இரவு படுக்கைக்கு சென்றவர் விடியும் முன்பு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மனித உயிர்களை காவு வாங்கும் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்களிக்க வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இருமுறை தீர்மானம் நிறைவேற்றி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டும், மத்திய அரசு அசைந்து கொடுக்கவில்லை. தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் பாஜகவுடன் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதில் ஆர்வம் காட்டிய எதிர்கட்சித் தலைவர், மாநில அரசு மீது அடிப்படையற்ற அவதூறு பேசி, மக்கள் கவனத்தை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று (04.05.2025) நீட் தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகள் நடத்தப்பட்ட விதம் நாகரிக சமூகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கும் மேலாக கருதும் "தாலி" கழட்டி வைக்க வேண்டும் என்பது தமிழர் மரபுக்கும், பண்பாட்டிற்கும் எதிரானது. சட்டை பட்டன்கள் கூட எண்ணி பார்த்து அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தேர்வு மையத்தில் நுழையும் முன்பாகவே பதற்றத்தையும், படபடப்பையும் உருவாக்கிய அடக்குமுறையை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், இனியும் தாமதிக்காமல் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்களிக்க வேண்டும் என பாஜக தலைமையிலான மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
The manner in which students were treated at the NEET examination centers has brought shame to civilized society Mutharasan condemns