காலை உணவின் தரத்தை ஆசிரியர்கள் சாப்பிட்டு உறுதி செய்ய வேண்டும்..பள்ளிக் கல்வித்துறை அதிரடி அறிவுறுத்தல்!
Teachers must taste and ensure the quality of the breakfast School Education Department issues a stern directive
தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவின் சுவை மற்றும் தரத்தை அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ரவா கிச்சடியில் பல்லி செத்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், மாணவர்களுக்கு காலை உணவு சமைக்கும் சமையலறையில் சமையலுக்குத் தேவையான பொருட்களைத் தவிர வேறு பொருட்களை வைக்கக்கூடாது என்றும், சமையலறையை எப்போதும் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமையல் பாத்திரங்கள் மற்றும் உணவு பரிமாறும் பாத்திரங்களை பயன்படுத்துவதற்கு முன்னும் பின்னும் நன்கு சுத்தம் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்களுக்கு உணவை பரிமாறுவதற்கு முன்பு அதன் தரம் மற்றும் சுவையை ஆசிரியர்கள் சாப்பிட்டு பார்த்து உறுதி செய்ய வேண்டும் என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உணவு சமைக்கப்படும் நேரத்திலும், சமைத்த பின்னரும், பரிமாறுவதற்காக வேறு பாத்திரங்களுக்கு மாற்றிய பின்னரும் உணவு முறையாக மூடி வைக்கப்பட்டு பாதுகாப்பாக இருப்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு உணவு பரிமாறும் பணியை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தினமும் கண்காணிக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே, திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அரசு நடுநிலைப் பள்ளியில் வழங்கப்பட்ட ரவா கிச்சடியில் பல்லி கிடந்ததாகவும், அந்த உணவை சாப்பிட்ட சில மாணவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சமையலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், தற்போது மாநிலம் முழுவதும் பள்ளிகளில் காலை உணவின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்யும் வகையில் இந்த புதிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
தொடர்ச்சியான கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் அரசு பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக கடந்த 2022ஆம் ஆண்டு காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இதன் மூலம் 37,447 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் சுமார் 19 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு இந்தத் திட்டத்திற்கு ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 6 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன் மூலம் கூடுதலாக சுமார் 15.30 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர். திட்டம் முதலில் 17ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், முதலமைச்சர் விஜய் லண்டன் பயணம் மேற்கொண்டிருந்ததால் தொடக்க நிகழ்ச்சி 22ஆம் தேதிக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. சென்னை திருவான்மியூர் காந்திகிராமத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கி திட்டத்தை விஜய் தொடங்கி வைத்தார். அப்போது மாணவர்களுடன் அமர்ந்து அவரும் காலை உணவு சாப்பிட்டார்.
தற்போதைய விரிவாக்கத்தின் மூலம் மொத்தம் 44,984 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 34 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளதாகவும், இதற்காக ரூ.217.63 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுவதால், அந்த இரு தொகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
English Summary
Teachers must taste and ensure the quality of the breakfast School Education Department issues a stern directive