தமிழ்த்தாய் வாழ்த்தே இனி முதன்மை...! - தமிழக அரசின் சட்டப்பேரவை நடவடிக்கைக்கு சீமான் ஆதரவு...!
Tamil thai vazhththu priority now Seeman supports Tamil Nadu government legislative action
தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதன்மையாகப் பாட வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார். தமிழ்மொழியின் உரிமையையும், தமிழர்களின் பண்பாட்டு அடையாளத்தையும் நிலைநிறுத்தும் வகையில் இந்த முடிவு அமைந்துள்ளதாக அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,"தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்தே முதலில் ஒலிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை முழுமையாக வரவேற்கிறேன்.
இந்த முடிவு தமிழ்மொழியின் பெருமையை நிலைநிறுத்தும் முக்கியமான முன்னெடுப்பாகும்.ஒரு இனத்தின் அடையாளத்தை உருவாக்குவதில் மொழிக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. அந்த இனத்தின் கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு, மரபு, வாழ்வியல், அரசியல் சிந்தனை என அனைத்தும் மொழியோடு பின்னிப் பிணைந்துள்ளன. அதனால்தான் மொழியை தாயாகப் போற்றுகிறோம்.
ஒரு சமூகத்தின் முகம், அதன் அடையாளம், அதன் தனித்துவம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் முதன்மையான கருவியாக தாய்மொழி விளங்குகிறது. அந்த வகையில், தமிழர்களின் வரலாற்றுத் தாயகமான தமிழ்நாட்டில் தமிழ்மொழிக்கு உரிய முதன்மையை வழங்குவது ஆட்சியாளர்களின் பொறுப்பாகும்.தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் இடம்பெறுவதை உறுதி செய்வது தமிழர்களின் மொழிப்பற்று மற்றும் தன்மான உணர்வுக்கு வழங்கப்படும் மரியாதையாக அமையும்.
இதே நடைமுறை ஒவ்வொரு தேசிய இனத்தின் தாயகத்திலும் அந்தந்த மக்களின் தாய்மொழி மற்றும் பண்பாட்டுக்கு ஏற்ற வகையில் அமைய வேண்டும்.பல மொழிகள், பல பண்பாடுகள், பல்வேறு வாழ்வியல் முறைகள் கொண்ட மக்கள் ஒன்றிணைந்து வாழ்வதே இந்தியாவின் தனிச்சிறப்பாகும். இந்த பன்முகத் தன்மையை மதித்து பாதுகாப்பதே நாட்டின் ஒருமைப்பாட்டை மேலும் வலுப்படுத்தும்.
ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் உரிய மொழி, பண்பாடு, வரலாறு மற்றும் தனித்துவ அடையாளங்களை பாதுகாப்பது அவசியம். மாறாக, ஒரே மொழி, ஒரே பண்பாடு என்ற அடிப்படையில் அனைத்தையும் ஒரே வடிவத்துக்குள் கொண்டு வர முயல்வது நாட்டின் பன்மைத்துவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.மொழி மற்றும் பண்பாட்டு வேறுபாடுகளை மதிக்காமல் ஒரு குறிப்பிட்ட மொழி அல்லது பண்பாட்டை பிற மாநிலங்கள் மீது திணிக்கும் முயற்சிகளை ஏற்றுக்கொள்ள முடியாது.
நாட்டின் பல்வேறு தேசிய இனங்களின் உரிமைகளையும் தனித்துவத்தையும் மதிப்பதே உண்மையான தேசிய ஒருமைப்பாட்டுக்கு அடிப்படையாக அமையும்.தமிழர்களின் மொழி உணர்வையும், தமிழ்நாட்டின் பண்பாட்டு தனித்துவத்தையும் கருத்தில் கொண்டு தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அதே நேரத்தில், பிற தேசிய இனங்களின் தாய்மொழிகளுக்கும் சமமான மரியாதை வழங்கப்பட வேண்டும்.
தமிழ்த்தாய் வாழ்த்தை நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் முதலில் பாட வேண்டும் என்பதை வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்த ஆளும் தவெக அரசுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கும் சீமான் தனது வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.மேலும், தீர்மானத்திற்கு ஆதரவு அளித்து ஒருமனதாக நிறைவேற்ற துணைநின்ற அனைத்து அரசியல் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழ்மொழியின் பெருமையை காக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், தமிழர்களின் மொழி மற்றும் பண்பாட்டு அடையாளங்களுக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Tamil thai vazhththu priority now Seeman supports Tamil Nadu government legislative action