கர்நாடகாவுக்கு எதிராக ஒன்றுபட்ட தமிழகம்! உதயநிதி கொடுத்த ஐடியா... மேகதாது தீர்மானத்தை முதல்வர் விஜய் திருத்திய பின்னணி என்ன...?
Tamil Nadu united against Karnataka Udhayanidhi idea What background behind Chief Minister Vijay amending Mekedatu resolution
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று முக்கியமான அரசியல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கர்நாடக அரசு மேகதாதுவில் அணை அமைக்கும் முயற்சிக்கு எதிராக அரசினர் தனித்தீர்மானம் முன்வைக்கப்பட்டு, பேரவையின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்மொழிந்த இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற அ.தி.மு.க. தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்.

விவாதத்தின் போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், மேகதாது விவகாரத்தில் தனி நடுவர் மன்றம் அமைக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.மேலும், “முதலமைச்சர் கொண்டு வந்துள்ள தனித்தீர்மானத்தில், மேகதாது பிரச்சினைக்கு தனி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற அம்சத்தையும் இணைக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து, பதிலுரை வழங்கிய முதலமைச்சர் ஜோசப் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த ஆலோசனையை ஏற்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
அப்போது அவர், “எதிர்க்கட்சித் தலைவரால் முன்வைக்கப்பட்ட கருத்தை தனித்தீர்மானத்தின் 4-வது பத்திக்கு அடுத்து கூடுதல் அம்சமாக சேர்க்கலாம் என பேரவைத் தலைவரிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.அதன்படி, அரசினர் தனித்தீர்மானத்தின் 4-வது பத்திக்குப் பிறகு புதிய அம்சம் இணைக்கப்பட்டது.
அதில், “தமிழ்நாடு அரசின் 4.3.2026 தேதியிட்ட கடிதத்தில் கோரியபடி, மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் தாவா சட்டம் 1956-ன் பிரிவு 4-ன் கீழ், புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது” என்ற வாசகம் சேர்க்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, திருத்தம் செய்யப்பட்ட அரசினர் தனித்தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.இந்த தீர்மானம், மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் தெளிவுபடுத்திய முக்கிய அரசியல் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
English Summary
Tamil Nadu united against Karnataka Udhayanidhi idea What background behind Chief Minister Vijay amending Mekedatu resolution