'எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவதில் காட்டும் வேகத்தை, மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவதில் காட்ட வேண்டும்'; வானதி சீனிவாசன்..! - Seithipunal
Seithipunal


''காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவதை தமிழ்நாட்டில் புதிதாக அமைந்துள்ள தவெக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். முதல்வர் விஜய், மேகேதாட்டு அணை பிரச்சினையில் மென்மையான போக்கை கடைப்பிடித்து வருகிறார். இது தமிழ்நாட்டுக்கு பெரும் தீங்கை விளைவிக்கும். என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவதில் காட்டும் வேகத்தை, மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவதில் த.வெ.க. அரசு காட்ட வேண்டும். சோனியா, ராகுல், கார்கேவை சந்தித்து மேகதாதுவில் கர்நாடக காங்கிரஸ் அரசு அணை கட்டுவதை முதலமைச்சர் ஜோசப் விஜய் தடுத்து நிறுத்த வேண்டும்.

பெங்​களூரு​வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கர்நாடக மாநில முதலமைச்சர் டி.கே.சிவகு​மார், "மேகதாது அணை திட்​டம் என் இதயத்​துக்கு நெருக்​க​மானது. மேகதாது அணை கட்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜ​ய்யுடன் பேச்சு நடத்த தயா​ராக இருக்​கிறேன்" என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாது, மேகதாது திட்​ட​மானது, சம நிலை அணைத் திட்​ட​ம். அங்கு நீரைத் தேக்​கி​னால் வறட்சிக் காலத்​தில் தமிழ்நாட்டிற்கு நீரை எளி​தாக திறந்​து​ விடலாம்" என்று தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முயற்சித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையாவிடம் இருந்து, முதலமைச்சர் பதவியை தன் வசப்படுத்தியுள்ள டி.கே. சிவகுமார், அதை தக்க வைப்பதற்காக மேகதாது அணை பிரச்சினையை தீவிரமாகக் கையிலெடுத்துள்ளார். சித்தராமையா தனது பதவிக்கு ஆபத்து வந்து விடக்கூடாது என்பதற்காக, தமிழ்நாடு - கர்நாடகம் இடையே பதற்றத்தை ஏற்படுத்த சிவகுமார் திட்டமிட்டு உள்ளாரோ என்ற சந்தேகம் எழுகிறது.

துணை முதல்வராகவும், நீர்ப்பாசனத் துறை அமைச்சராகவும், இருந்த சிவகுமார், "மேகதாது அணை கட்டியே தீருவோம்" என்று அடிக்கடி சவால் விட்டுக் கொண்டிருந்தார். இப்போது அவர் முதலமைச்சராகி விட்டதால், மேகதாது அணையைக் கட்டி கர்நாடக அரசியலில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சித்து வருகிறார். அதன் வெளிப்பாடு தான் அவரது நேற்றைய பேட்டி. காவிரி நதி பாயும் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களின் அனுமதி இல்லாமல் கர்நாடகம் அணை கட்டக்கூடாது என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பாகும்.

இதை மதிக்க வேண்டியது அரசியலமைப்பு சட்டப்படி பதவியேற்ற முதலமைச்சர் சிவக்குமாரின் கடமையாகும். ஆனால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல், மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று அவர் பேசிக் கொண்டிருக்கிறார். உச்ச நீதிமன்றமும் காவிரி நடுவர் மன்றமும் அளித்த இறுதி தீர்ப்பின்படி, தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரை கர்நாடகம் திறந்து விடுவதில்லை. மழைக் காலங்களில் வரும் உபரி நீர் தான் தமிழ்நாட்டிற்கு இப்போதும் வந்து கொண்டிருக்கிறது.

இந்த மோசமான சூழலில் மேகதாதுவில் கர்நாடக காங்கிரஸ் அரசு அணை கட்டினால், இப்போது தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருக்கும் உபரி நீரும் வராது. தமிழ்நாடு பாலைவனமாக மாறிவிடும். தமிழ்நாட்டில் 15க்கும் அதிகமான மாவட்டங்கள் குடிநீருக்காக காவிரி ஆற்றையே நம்பியிருக்கின்றன. மேகதாதுவில் அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டில் விவசாயம் பாதிக்கப்படுவதோடு, குடிநீர் பஞ்சமும் ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதை தமிழ்நாட்டில் புதிதாக அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியுடன் த.வெ.க. கூட்டணி அமைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் முதலமைச்சர் ஜோசப் விஜய் அமைச்சரவையில் உள்ளனர். தமிழ்நாட்டில் நம் கூட்டணி கட்சி தானே ஆட்சி செய்கிறது. அவர்களை எப்படியாவது ஏமாற்றி மேகதாதுவில் அணை கட்டி விடலாம் என்று சிவகுமார் நினைக்கிறார்.

ஆனால் காங்கிரசை கூட்டணியில் சேர்த்துக் கொண்டு, அமைச்சர் பதவியும் கொடுத்து, கொஞ்சி குலாவிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய், மேகதாது அணை பிரச்சினையில் மென்மையான போக்கை கடைப்பிடித்து வருகிறார். இது தமிழ்நாட்டுக்கு பெரும் தீங்கை விளைவிக்கும். எனவே, கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரை முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் சந்தித்து மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்று டி.கே. சிவகுமாருக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்த வேண்டும்.

பெரும்பான்மை இல்லாத போதும், ஆட்சி அமைப்பதிலும், ஆட்சியை தக்க வைக்க இப்போது எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவதில் காட்டும் வேகத்தையும், திறமையையும், தமிழ்நாட்டின் நலனுக்காகவும் முதலமைச்சர் ஜோசப் விஜய் பயன்படுத்த வேண்டும். வெறுமனே மத்திய அரசுக்கு கடிதம், கர்நாடக முதலமைச்சருக்கு கோரிக்கை, சட்டமன்றத்தில் தீர்மானம் என்று கடந்த கால திமுக அரசைப் போல வெற்று நாடகங்களை நடத்திக் கொண்டிருக்காமல், கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தலைவர்களை நேரில் சந்தித்து மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

மாறாக திமுகவைப் போல கர்நாடக காங்கிரஸ் அரசிடம் மென்மையான போக்கை த.வெ.க. அரசு கையாண்டால், திமுகவை எப்படி மக்கள் விரட்டியடித்தார்களோ, அதுபோலவே த.வெ.க. அரசையும் விரட்டியடிப்பார்கள். மேகதாது அணை பிரச்சினையில் த.வெ.க. அரசின் செயல்பாடு தமிழகத்தின் நலன் சார்ந்ததாக மட்டுமே இருக்க வேண்டும்ம் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள கர்நாடக காங்கிரஸ் அரசிடம் மென்மையான அணுகுமுறையை ஒருபோதும் கையாளக் கூடாது. அப்படி செய்தால் வரலாறு முதலமைச்சர் ஜோசப் விஜய்யை ஒருபோதும் மன்னிக்காது''  என்று வானதி சுட்டிக்காட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vanathi Srinivasan says the TVK government must act swiftly to halt the construction of the dam at Mekedatu


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->