கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்; 'உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும்': நயினார் நாகேந்திரன்..!
Tamil Nadu Governor RN Ravi and Nainar Nagendran condole the deaths in the Karur stampede incident
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பை மேற்கொண்டார். அங்கு விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும் போது நெரிசல் ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்து, கரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி 08 குழந்தைகள் 16 பெண்கள் உட்பட 36 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது.
இந்நிலையில், இது குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
கரூரில் நடந்த அரசியல் பேரணி கூட்டத்தில் குழந்தைகள் உள்பட அப்பாவி உயிர்கள் பறிபோனது மிகுந்த வலியையும் வேதனையையும் அளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில் உறவுகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், குறிப்பிட்டுள்ளதது:
நெஞ்சு பதைக்கிறது. கரூரிலிருந்து வரும் செய்திகள் பேரதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கவும் வார்த்தைகளின்றித் திகைக்கிறேன். நெரிசலிலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணமும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென தமிழ்நாடு தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Tamil Nadu Governor RN Ravi and Nainar Nagendran condole the deaths in the Karur stampede incident