கரூர் கூட்ட நெரிசல்: கமல்ஹாசன் இரங்கல்; 'காவல் துறையினரின் மெத்தனப் போக்கும் ஒரு காரணம்'என்கிறார் ஓபிஎஸ்..!
OPS says police laxity is one of the reasons for the Karur stampede
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பை மேற்கொண்டார். அங்கு விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும் போது நெரிசல் ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்து, கரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி 08 குழந்தைகள் 16 பெண்கள் உட்பட 36 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது.
இந்த செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன் என அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் வேதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரண குணமடைந்து இல்லம் திரும்ப வேண்டுமென்று எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிரசாரக் கூட்டத்திற்கு வருவதை குழந்தைகள் மற்றும் முதியோர்கள் தவிர்க்க வேண்டுமென்று விஜய் வேண்டுகோள் விடுத்த நிலையிலும், இதுபோன்றதொரு சம்பவம் நடைபெற்று இருப்பது வருத்தமளிக்கிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கவும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவும். இனி வருங்காலங்களில் இதுபோன்று கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை எடுக்கவும் தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். மேற்படி கூட்ட நெரிசலுக்கு காவல் துறையினரின் மெத்தனப் போக்கும் ஒரு காரணம். எனவே, மேற்படி சம்பவம் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். என்று அவருடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து, ம.நீ.ம. தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:
'நெஞ்சு பதைக்கிறது. கரூரிலிருந்து வரும் செய்திகள் பேரதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கவும் வார்த்தைகளின்றித் திகைக்கிறேன்.
நெரிசலிலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணமும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
English Summary
OPS says police laxity is one of the reasons for the Karur stampede