ரவுடியுடன் காதல்: போலீஸ்காரர் மாப்பிள்ளையை விடுத்து குற்றவாளியுடன் ஓடிய பெண் காவலர்!
Law Meets Lawbreaker UP Constable Elopes with Notorious Thief Days Before Wedding
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், சினிமா கதையையே மிஞ்சும் ஒரு விசித்திரமான காதல் விவகாரம் அரங்கேறியுள்ளது. மீரட் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்த சந்தியா பரத்வாஜ், பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி அங்கித் சவுகானை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டார். அப்போது, 'சட்டத்தைப் பாதுகாப்பவருக்கும் சட்டத்தை மீறுபவருக்கும்' இடையே எதிர்பாராத விதமாகக் காதல் மலர்ந்தது.
திருமணத்தில் நேர்ந்த திருப்பம்:
அங்கித் ஒரு கொள்ளை வழக்கில் சிறைக்குச் சென்றபோது, சந்தியாவின் பெற்றோர் அவருக்கு அதுல் சர்மா என்ற போலீஸ்காரருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து வைத்தனர். திருமணப் பத்திரிகைகள் கொடுக்கப்பட்டு, ஏற்பாடுகள் தடல்புடலாக நடந்து வந்தன. ஆனால், திருமணத்திற்குச் சில நாட்களே இருந்த நிலையில், அங்கித் ஜாமீனில் வெளியே வந்தார். காதலனின் வருகையை அறிந்த சந்தியா, தனது நிச்சயிக்கப்பட்ட வாழ்வைத் துறந்து கடந்த சனிக்கிழமை அங்கித்துடன் வீட்டை விட்டு வெளியேறினார்.
பிடிவாதமான காதல்:
பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், பக்ஸர் நகரில் பதுங்கியிருந்த காதலர்களைப் போலீஸார் கண்டுபிடித்தனர். அங்கித்தின் குற்றப் பின்னணியைச் சுட்டிக்காட்டி போலீஸார் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், சந்தியா தனது முடிவில் உறுதியாக இருந்தார். "அவர் மீது எத்தனை வழக்குகள் இருந்தாலும், அவரையே நான் திருமணம் செய்துகொள்வேன்; அவரைப் பிரிந்து வரமாட்டேன்" எனச் சந்தியா பிடிவாதம் பிடித்தார்.
இதன் விளைவாக, ஒரு போலீஸ்காரருடன் நடக்கவிருந்த சந்தியாவின் திருமணம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. கடமையைக் கண் எனக் கருத வேண்டிய காவலரே, ஒரு குற்றவாளியைக் கரம்பிடிக்க வீட்டை விட்டு வெளியேறிய இச்சம்பவம் உ.பி. காவல்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Law Meets Lawbreaker UP Constable Elopes with Notorious Thief Days Before Wedding