மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம் மற்றும் ரூ.3,000 நிதியுதவி - முதல்வர் சுவேந்து அதிகாரி அறிவிப்பு!
Swevendu Adhikari Announces Free Bus Travel and 3000 Monthly Grant for Women in West Bengal
மேற்கு வங்க மாநில அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி பாரதிய ஜனதா கட்சி முதன்முறையாக அரியணை ஏறியுள்ளது. மாநிலத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சுவேந்து அதிகாரி, பதவியேற்றது முதலே தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். குறிப்பாக, பெண்களின் முன்னேற்றம் மற்றும் மாநிலப் பாதுகாப்பு சார்ந்த முக்கியத் திட்டங்களை அவர் அடுத்தடுத்து அறிவித்து வருகிறார்.
பாஜகவின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட மிக முக்கியமான வாக்குறுதியான பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணத் திட்டம், வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதன் மூலம் அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றிப் பயணிக்கலாம். பணிக்குச் செல்லும் பெண்கள் மற்றும் மாணவிகள் உள்ளிட்ட லட்சக்கணக்கானோர் இந்தத் திட்டத்தால் நேரடியாகப் பயனடைவார்கள். இந்தத் திட்டம், தமிழ்நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள 'மகளிர் விடியல் பயணம்' திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், பெண்களுக்கான நிதியுதவித் திட்டத்திலும் புதிய அரசு அதிரடி மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. முந்தைய மம்தா அரசு 'லக்ஷ்மீர் பந்தர்' திட்டத்தின் கீழ் வழங்கி வந்த 1,500 ரூபாய் நிதியுதவியை, தற்போது பாஜக அரசு இரண்டு மடங்காக உயர்த்தி, 'அண்ணபூர்னா பந்தர்' திட்டத்தின் கீழ் மாதம் 3,000 ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளது. இதுவும் வரும் ஜூன் 1 முதல் அமலுக்கு வருகிறது. மேலும், மத்திய அரசின் 'ஆயுஷ்மான் பாரத்' மருத்துவக் காப்பீட்டுத் திட்டமும் அன்று முதல் மாநிலத்தில் செயல்பாட்டுக்கு வரும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
நிர்வாக ரீதியாகவும் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ள முதல்வர் சுவேந்து அதிகாரி, பள்ளி ஆசிரியர் பணிக்கான விண்ணப்பதாரர்களின் உச்ச வயது வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார். மாநிலத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், மேற்கு வங்க - வங்கதேச எல்லைப் பகுதிகளில் வேலி அமைப்பதற்கான நிலங்களை எல்லைப் பாதுகாப்புப் படைக்கு (BSF) விரைந்து ஒதுக்கீடு செய்யவும் அவர் ஆணையிட்டுள்ளார். ஏற்கனவே நடைமுறையில் உள்ள அனைத்து நற்பணித் திட்டங்களும் எவ்விதத் தடையுமின்றித் தொடரும் என்றும், புதிய திட்டங்கள் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
English Summary
Swevendu Adhikari Announces Free Bus Travel and 3000 Monthly Grant for Women in West Bengal