'அமைச்சர் பதவிக்காக சென்றவர்களுக்கு முதல்வர் விஜய் பெரிய அண்டாவில் அல்வா கிண்டி கொடுத்துவிட்டார்'; எடப்பாடி பழனிசாமி கிண்டல்..!
Palaniswami teases that Chief Minister Vijay gave halva and kindi to those who went for ministerial post
அதிமுக சின்னத்தில் வென்ற எம்எல்ஏக்கள் அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு தவெகவுக்கு சென்றவர்களுக்கு விஜய் அல்வா கொடுத்துவிட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது,
தமிழகத்தில் ஆட்சி நடக்கிறதா என்ற சந்தேகம் உள்ளதாகவும், ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்சினைக்கு குரல் கொடுப்பது அதிமுக தான் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தமிழக அரசின் காவரி நடுவர் மன்றம் தேவையற்றது என்பதை பல கட்சிகள் வலியுறுத்தியுள்ளன என்று குறிப்பிட்டதோடு, விவசாயிகள் கொந்தளிப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், அண்மையில் கரூர் சென்றிருந்த முதல்வர் விஜய், அதிமுக - திமுக கூட்டுக் களவாணி என்று விமர்சனம் செய்திருந்தார். இது எவ்வளவு பெரிய வார்த்தை என்றும், முதல்வர் விஜய் தான் வகிக்கும் பொறுப்புக்கு ஏற்ப பேச வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அதிமுக சின்னத்தில் வென்ற எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து, தவெகவில் சேர்த்த முதல்வர் விஜய்தான் களவாணி என்றும், விஜய் முதல்வர் அந்தஸ்துக்கே வரவில்லை. 04-ஆம் தர பேச்சாளரைப் போல பேசிக் கொண்டிருக்கிறார் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
அத்துடன், முதல்வர் விஜய் ஆக்கபூர்வமாக எதையும் செய்யவில்லை என்றும், வெறும் பஞ்ச் டயலாக் பேசி வருகிறார். 60 நாள் ஆட்சியில் என்ன செய்துள்ளனர்? கேமராவை தாங்கிப் பிடிக்க 03 கால்கள் தேவை என்றும், விஜய்யின் நாற்காலியில் ஒரு கால் இரவல் கால். அது இடறினால், ஆட்சி சாய்ந்துவிடும் என்று சாடியுள்ளார்.

கூட்டணி கட்சிகளை அனுசரிக்கும் வரை இக்கட்சி நீடிக்கும் என்றும், கூட்டணி தலைவர்கள் தினம்தோறும் ஒவ்வொன்று சொல்லி வருகிறார்கள் என்றும், வேறு கூட்டணியில் வென்றவர்கள்தான் விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு அளித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், திமுக - அதிமுக கூட்டணி என்பது கட்டுக்கதை என்றும், எம்ஜிஆர் கட்சியை துவங்கியபோது சொன்ன தீயசக்தி திமுக என்ற நிலைப்பாட்டில்தான் இன்றும் இருக்கிறோம் என்றும், என்னுடைய தேர்தல் சுற்றுப்பயணம் முழுவதும் திமுகவின் தவறுகளையே பேசினேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அதிமுகவில் இருந்து வெளியேறுபவர்களை பற்றி அவர்களிடம்தான் கேட்க வேண்டும் என்றும், ஆட்சி அமையவில்லையென்றால் ஆதிக்கம் என பேசுவார்களா? வேறு இடத்துக்கு சென்றால் அமைச்சர் பதவி கிடைக்கும் எனச் சென்றனர். ஆனால் அவர் (முதல்வர் விஜய்) பெரிய அண்டாவில் அல்வா கிண்டி கொடுத்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், தற்போது காங்கிரஸின் நிலை பரிதாபமாக உள்ளதாகவும், கொள்கை கூட்டணி என்றனர். இப்போது பதவிக்காக சென்றுவிட்டனர். இதில் கொள்கை எங்கு உள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல்வர் விஜய், அவரது ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளரை டெல்லி சிறப்பு அதிகாரியாக நியமித்துள்ளார். வரும் நாட்களில் அவரது மேக்கப் மேனுக்கும் ஒரு பதவி கொடுத்து விடுவார். அரசாங்கம் கேள்விக்குறியாகி விட்டது” என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
English Summary
Palaniswami teases that Chief Minister Vijay gave halva and kindi to those who went for ministerial post