30 குண்டுகள் முழங்க, பூரண அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட எழுத்தாளர் பூமணி உடல்..! - Seithipunal
Seithipunal


'சாகித்ய அகாடமி' விருது பெற்ற எழுத்தாளர் பூமணி (79) கடந்த 12-ஆம் தேதி சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார்.  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஆண்டிபட்டியைச் சேர்ந்தவர் பூமணி. அவரது இயற்பெயர் பூலித்துறை மணிவாசகம்.

1947-ஆம் ஆண்டு, மே 12-ஆம் தேதி பிறந்த இவர், தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளாராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி செல்லம். இவர்களுக்கு மகன்கள் சபி, ரவி, மகள் கவிதா ஆகியோர் உள்ளனர்.

இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்ட இவர் எழுதிய வெக்கை, பிறகு, வாய்க்கால், வரப்புகள், அஞ்ஞாடி போன்ற நாவல்கள் புகழ் பெற்றவை. அத்துடன், பல்வேறு சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

இவரது 'அஞ்ஞாடி' நாவலுக்காக 2014-ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. அத்துடன், பூமணி எழுதி வெக்கை நாவல் 1982-இல் வெளியானது. இந்த நாவல்தான் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'அசுரன்' திரைப்படமாக வெளியானது.

12-ஆம் தேதி காலமான எழுத்தாளர் பூமணியின் உடல் நேற்று ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி பாரதி நகரில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இன்று காலை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.கீதாஜீவன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜீ.வி.மார்க்கண்டேயன், கா.கருணாநிதி, திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் ஏராளமான எழுத்தாளர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர் பிற்பகல் 02 மணிக்கு எழுத்தாளர் பூமணியின் உடல் அவரது சொந்த ஊரான கோவில்பட்டி அருகே ஆண்டிப்பட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு பூமணிக்கு சொந்தமான நிலத்தில் இறுதி சடங்குகள் நடைபெற்றன.

தொடர்ந்து அரசு சார்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன்ராஜா, மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கா.கருணாநிதி, ரெட்டியார்பட்டி நாராயணன் (நாங்குநேரி) ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் எழுத்தாளர் பூமணியின் உடலுக்கு அரசு சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணன் தலைமையிலான 10 காவலர்கள் வானத்தை நோக்கி 03 சுற்றுக்களாக 30 குண்டுகள் முழங்க செய்து, அரசு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

எழுத்தாளர் பூமணியின் இறுதி நிகழ்வில், தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், அதிமுக அமைப்புச் செயலாளர் சின்னத்துரை மற்றும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Writer Poomanis body was buried with full state honors after 30 gunshots


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->