மேகேதாட்டு அணை திட்டம்; தமிழக அரசின் மறு ஆய்வு மனுவை நிராகரித்துள்ள உச்ச நீதிமன்றம்..!
Supreme Court Rejects Tamil Nadu Governments Review Petition Regarding Mekedatu Dam Project
மேகேதாட்டு அணை திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்த ஒப்புதலை எதிர்த்த தமிழக அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நிராகரித்தது. அந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழக புதிய அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்த மறுஆய்வு மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன், என்.வி. அஞ்சாரியா அமர்வு விசாரித்தது. அப்போது, 'மறு ஆய்வு மனுவின் உள்ளடக்கங்களையும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணங்களையும் நாங்கள் கவனமாக பரிசீலித்தோம். இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யத் தேவையான முகாந்திரம் ஏதும் இல்லை என்பதில் நாங்கள் திருப்தி அடைகிறோம்' என கூறி நிராகரித்துள்ளது.
அத்துடன், இந்த விவகாரம் தொடர்பாக திறந்த நீதிமன்ற விசாரணைக்கான கோரிக்கையையும் நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.

அதாவது, கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்த ஒப்புதலை தமிழக அரசு எதிர்த்து, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்டோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அதன்படி, கடந்த 2025 நவம்பர் 13-ஆம் தேதி அப்போதைய தலைமை நீதிபதியாக இருந்த பி.ஆர்.கவாய் அமர்வில் இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அப்போது, 'காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சி, காவிரி தீர்ப்பாயத்தின் உத்தரவை மீறும் செயலாகும். இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் தமிழகம் பெரிதும் பாதிக்கப்படும்' என்று தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.
மேலும், மேகேதாட்டு அணை திட்டத்தால் தமிழகம் எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்றும், தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரை வழங்க இத்திட்டம் தடையாக இருக்காது என்று கர்நாடக அரசு தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், கர்நாடக அரசின் திட்ட வரைவு அறிக்கை, காவிரி ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிசீலனையில் மட்டுமே உள்ளதாகவும், அந்த அமைப்புகள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே வரைவு அறிக்கை ஏற்கப்படும் என்று மத்திய நீர் ஆணையம் தெளிவுபடுத்தியது. அது தவிர, காவிரி வழக்கின் தீர்ப்பின்படி தண்ணீரை திறக்க மறுத்தால் கர்நாடக அரசு நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகும் என்று குறிப்பிட்டனர்.
அத்துடன், மேகேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால் அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடரலாம் என்று கூறினர். தற்போதைய சூழ்நிலையில், தமிழக அரசின் இந்த மனு அவசரப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், விசாரணைக்கு ஏற்க முடியாது என்று தெரிவித்து குறித்த மனுவை நிராகரித்தனர்.
இந்நிலையில், இதே மேற்கூறிய காரணங்களைச் சுட்டிக்காட்டி இந்த தமிழகத்தின் மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் அமர்வு நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Supreme Court Rejects Tamil Nadu Governments Review Petition Regarding Mekedatu Dam Project