“தவெக ஆச்சரியம் தரலாம்”! விஜய்க்கு சப்போர்ட்டா? தவெக பக்கம் சாயும் தமிழக வாக்கு! மதிமுக கணக்கு பலிக்குமா?
Support for Vijay Tamil Nadu votes lean towards Tvk Will MDMK calculations work
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அளித்துள்ள பேட்டி அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) குறித்து அவர் கூறிய கருத்துகள் கவனத்தை ஈர்த்துள்ளன.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் குறித்து பேசும் போது, பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கணிப்புகள் ஒரே மாதிரியாக இல்லையென வைகோ சுட்டிக்காட்டினார்.
“சில கருத்துக்கணிப்புகள் திமுக கூட்டணிக்கு சாதகமாக உள்ளன. சில அதிமுகவுக்கு சாதகமாக இருக்கின்றன. இன்னும் சில தவெக கணிசமான முன்னேற்றம் காணும் எனச் சொல்கின்றன. எல்லா கணிப்புகளும் ஒன்றுக்கொன்று மாறுபட்டுள்ளன. எனவே இறுதி முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டியது அவசியம்,” என வைகோ தெரிவித்தார்.
மேலும், விஜய் தலைமையிலான தவெக குறித்து பேசுகையில், “புதிய அரசியல் சக்தியாக தவெக உருவெடுத்து வருகிறது. குறிப்பாக மாணவர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் மத்தியில் அந்தக் கட்சிக்கு ஆதரவு இருக்கலாம். முடிவுகள் வெளியாகும் போது சில ஆச்சரியங்கள் இருக்கலாம்,” என்று அவர் கூறினார்.
வைகோவின் இந்தக் கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. தமிழக அரசியலில் நீண்ட அனுபவம் கொண்ட ஒரு மூத்த தலைவர், புதிய அரசியல் சக்தியின் தாக்கத்தை வெளிப்படையாக ஏற்றுக்கொள்வது அரசியல் ரீதியாக முக்கியமான சிக்னலாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் மதிமுகவுக்குள் சில நிர்வாகிகள் பொறுப்புகளில் இருந்து விலகியிருப்பதும் கட்சிக்குள் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பணிகள் முடிந்த பின்னரே இந்த முடிவை எடுத்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், வைகோவின் பேட்டி தேர்தல் முடிவுகளுக்கு முன்பே அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது, கருத்துக்கணிப்புகளைத் தாண்டி உண்மையான மக்கள் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதே இப்போது அனைவரின் கவனமாக உள்ளது.
English Summary
Support for Vijay Tamil Nadu votes lean towards Tvk Will MDMK calculations work