திடீர் திருப்பம்! மாணவிக்காக வீடு கட்ட உத்தரவிட்ட ஸ்டாலின்... இன்று நேரில் ஆய்வு...!
Sudden turn Stalin ordered construction house student In person inspection today
சென்னையில் கடந்த மாதம் நடைபெற்ற “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” நிகழ்ச்சியில், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் படித்து, தனியார் நிறுவனத்தில் வேலை பெற்ற மாணவர்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டினார்.
அந்த நேரத்தில், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கழுநீர்குளத்தைச் சேர்ந்த பிரேமா என்ற மாணவி பேசும் போது, தன்னுடைய குடும்பம் கடுமையான பொருளாதார சிரமத்தில் வாழ்கிறது என்றும், மழை பெய்தால் தங்கள் வீடு வழியும் நிலை என்று கண்கலங்கக் கூறினார்.

அதை கேட்ட முதலமைச்சர் ஸ்டாலின், உடனடியாக நடவடிக்கை எடுத்து, பிரேமாவிற்கு “கலைஞர் கனவு இல்ல திட்டம்” மூலம் புதிய வீடு வழங்க உத்தரவிட்டார்.அதனைத் தொடர்ந்து தென்காசி கலெக்டர் கமல்கிஷோர், கடந்த 27ஆம் தேதி மாணவியின் வீட்டுக்கே நேரில் சென்று வீடு கட்டும் ஆணையை வழங்கி, பணிகள் தொடங்கும் வகையில் ஏற்பாடு செய்தார்.
இந்நிலையில் இன்று தென்காசி மாவட்ட அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த முதல்வர் ஸ்டாலின், நிகழ்ச்சிக்கு செல்லும் வழியிலேயே வாகனத்தை நிறுத்தி, எந்த முன் அறிவிப்பும் இன்றி பிரேமாவின் வீட்டிற்கு நேரடியாக சென்றார்.அங்கு நடைபெற்று வந்த கனவு இல்ல கட்டுமானப் பணிகளை அவர் நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் மாணவி பிரேமாவுடன் தொலைபேசியில் உரையாடிய ஸ்டாலின், “உன் கனவு விரைவில் நனவாகும்” என உணர்ச்சி பொங்கப் பேசினார். மேலும் மாணவியின் பெற்றோர்களிடமும் சில நிமிடங்கள் உரையாடி, அவர்களின் நலனை விசாரித்தார்.பின்னர் மக்களின் வாழ்த்துகளுடன் முதல்வர் ஸ்டாலின் விழா மேடைக்கு புறப்பட்டார், ஒரு மாணவியின் கனவை நனவாக்கிய தருணமாக இது மாறியது.
English Summary
Sudden turn Stalin ordered construction house student In person inspection today