மாணவர்கள் உயிருடன் விளையாடக் கூடாது...! - பள்ளிகளில் வழங்கப்படும் முட்டைகளின் காலாவதி தேதியை ஆய்வு செய்ய அண்ணாமலை அதிரடி வலியுறுத்தல்...!
Students should not play live animals Annamalai urges action inspect expiration date eggs served schools
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், தமிழக பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் முட்டைகளின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து கடும் கவலை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த பதிவில், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் முட்டைகளுக்காக தமிழக அரசு ஆண்டு முழுவதும் ஒரு முட்டைக்கு ரூ.5.63 என்ற நிரந்தர விலையை நிர்ணயித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் கடந்த மார்ச் மாதத்தில் சந்தை விலை ஒரு முட்டைக்கு ரூ.3.70 ஆக சரிந்தபோது, ஒப்பந்ததாரர்கள் சுமார் 20 கோடி முட்டைகளை மொத்தமாக வாங்கி குளிர்சாதன கிடங்குகளில் சேமித்து வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், குறைந்த விலையில் வாங்கப்பட்ட இந்த முட்டைகள், ஆண்டு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முட்டை என்பது நீண்ட நாட்கள் தரம் குன்றாமல் பாதுகாக்கக்கூடிய பொருள் அல்ல என்றும், மாதக்கணக்கில் குளிர்சாதன கிடங்குகளில் சேமித்து வைத்து பின்னர் தொலைதூர கிராமப்புற பள்ளிகளுக்கு அனுப்பப்படும் போது, அதன் ஊட்டச்சத்து, தரம் மற்றும் உணவு பாதுகாப்பு கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு பலமுறை அழுகிய முட்டைகள் வழங்கப்பட்ட சம்பவங்களை நினைவுபடுத்தியுள்ள அண்ணாமலை, தற்போதைய ஆட்சியிலும் அதே நிலை மீண்டும் உருவாகக்கூடாது என்று எச்சரித்துள்ளார். இது வெறும் கொள்முதல் நடைமுறையோ அல்லது நிர்வாக சிக்கலோ அல்ல; லட்சக்கணக்கான குழந்தைகளின் உடல்நலம் மற்றும் பெற்றோர்களின் நம்பிக்கையுடன் நேரடியாக தொடர்புடைய விஷயமாகும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
எனவே, முட்டைகளின் சேமிப்பு காலம், தரச் சோதனை, போக்குவரத்து முறை மற்றும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிலை உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் தமிழக அரசு முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் கடுமையான கண்காணிப்பையும் உடனடி ஆய்வையும் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தில் எந்தவித அலட்சியத்திற்கும் இடமில்லை” என்றும் அண்ணாமலை தனது பதிவில் ஆவேசமாக குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Students should not play live animals Annamalai urges action inspect expiration date eggs served schools