தமிழகத்தில் இன்று தொடங்கியது உங்களுடன் ஸ்டாலின் திட்டம்!
Stalins project with you started today in Tamil Nadu
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏழை - எளிய மக்களின் குறைகளை தீர்ப்பதற்காக, கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது தொகுதி வாரியாக சென்று மக்களிடம் மனுக்களை பெற்றார். அவ்வகையில் அவரிடம் சுமார் 1 கோடி 5000 பேர் மனுக்களை அளித்தனர்.இந்த மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ள குறைகளுக்கு தீர்வு காண "முதல்வரின் முகவரி" என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது. இந்த துறையின் மூலம் கடந்த மாதம் வரை 1 கோடியே ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழக மக்கள் அரசு திட்டங்களுக்கு விண்ணப்பித்து இருந்தால் அதன் பலன்களை உடனடியாக பெற வேண்டும் என்ற எண்ணத்தில் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை கடந்த 2023-ம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி முதல் கட்டமாக 2,058 முகாம்கள் நடத்தப்பட்டு 9 மனுக்கள் பெறப்பட்டு அவை அனைத்துக்கும் தீர்வு காணப்பட்டது.2-வது கட்டமாக கிராமப் பகுதிகளில் கடந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை 2,344 முகாம்கள் நடத்தப்பட்டு சுமார் 13 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்களில் 95 சதவீதம் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு குறைகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.3-வது கட்டமாக தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்காக கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை 433 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 1 லட்சத்து 80 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டன. இதில் 1 லட்சத்து 47 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.இந்த நிலையில் மக்களின் குறைகளை அவர்களது இருப்பிடத்துக்கே சென்று தீர்த்து வைக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் "உங்களுடன் ஸ்டாலின்" என்ற திட்டத்தின் கீழ் முகாம்கள் நடத்தப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
இந்த திட்டம் சிதம்பரத்தில் தொடங்கி வைக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து சிதம்பரத்துக்கு ரெயிலில் புறப்பட்டு சென்றார். நேற்று இரவு அவர் சிதம்பரம் கீழவீதியில் உள்ள ஓட்டலில் தங்கினார்.இன்று காலை சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அவர் சிதம்பரத்தில் உள்ள திருமண மண்டபத்துக்கு புறப்பட்டு வந்தார்.
அங்கு அவர் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தை தொடங்கி வைத்தார்.இந்த திட்டம் முதல்வரின் முகவரி துறை வழியே செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகள் சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் தமிழகம் முழுவதும் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது.உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின்கீழ் நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 வகையான சேவைகளை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுபோல கிராமப் பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 வகையான சேவைகள் பெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த சேவைகளை பெற முதல் கட்டமாக இன்று முதல் நவம்பர் மாதம் வரை தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. நகரப் பகுதிகளில் 3,738 முகாம்களும், கிராமப் பகுதிகளில் 6,232 முகாம்களும் நடத்தப்படும்.இது மக்களுடன் முதல்வர் திட்டத்தில் நடத்தப்பட்ட முகாம்களை விட 2 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின்கீழ் முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர்கள், கணினி இயக்குநர்கள் போன்றவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் முதல் கட்டமாக இன்று முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15-ந்தேதி வரை நகரப் பகுதிகளில் 1,428 இடங்களிலும், கிராமப் பகுதிகளில் 2,135 இடங்களிலும் மனுக்களை பெறுவார்கள்.ஒவ்வொரு மாவட்டத்திலும் தினமும் வெவ்வேறு இடங்களில் 6 முகாம்கள் நடத்தப்படும். முகாம்களுக்கு வரும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. முகாம்கள் நடக்கும் தகவல்கள் பிரத்யேக இணையதளத்தில் தெரிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பெண்கள் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு முகாம்களிலும் மகளிர் உரிமைத் தொகைக்காக 4 கவுண்டர்கள் உருவாக்கப்பட்டு இருக்கும். மற்ற சேவைகளை பெற தலா 2 கவுண்டர்கள் இருக்கும்.இந்த முகாம்களில் இ-சேவை, ஆதார் அட்டையில் மாற்றங்கள் போன்றவற்றையும் முகாம்களில் செய்யலாம். இந்த சேவைக்கு மட்டும் பாதி கட்டணமாக அதாவது ரூ.30 வசூலிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் முகாம்களில் பெறப்படும் மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு தரப்பில் தெரிவிக்கப்படும் பதில்கள் திருப்தியாக இல்லாவிட்டால் மனு தாரர்கள் மேல்முறையீடு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.மனுக்கள் கொடுத்த பிறகு அது எந்த நிலையில் உள்ளது என்பதை இணைய தளம் வாயிலாக தெரிந்து கொள்ளும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சிதம்பரத்தில் நடந்த விழாவில் தொடங்கி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Stalins project with you started today in Tamil Nadu