ஆட்சி புரண்ட பின்னும் நீதியின் பிடியில் ஷேக் ஹசீனா...! மனித உரிமை மீறல் குற்றம் நிரூபிப்பு!
Sheikh Hasina grip justice even after coup Human rights violations proven
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மனிதகுலத்துக்கு எதிரான கொடூர குற்றங்களில் ஈடுபட்டதாக அந்நாட்டு சர்வதேச குற்ற தீர்ப்பாயம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன்மூலம், ஹசீனா இந்த வழக்கில் அதிகாரபூர்வமாக குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.கடந்த ஆண்டு வங்கதேசம் முழுவதும் வெடித்த மாணவர் போராட்டங்கள் நாட்டை அதிரவைத்தன. கொடூரமான ராணுவ துப்பாக்கிச் சூடு, வன்முறை சம்பவங்கள் என பல்வேறு தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
இந்த ரத்தக்கறை போராட்டத்திற்குப் பிறகு, ஷேக் ஹசீனாவின் நீண்டகால ஆட்சி புரண்டு விழுந்தது. அதனைத் தொடர்ந்து அவர் வங்கதேசத்தை விட்டு தப்பி, இந்தியாவுக்கு தஞ்சம் புகுந்தார்.பின்னர் நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டதும், ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை, ஊழல், மனித உரிமை மீறல் உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

முன்பு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவருக்கு ஆறு மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.இந்த சூழலில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்,"கடந்த ஆகஸ்ட் மாதத்தில், அரசு இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக போராடிய மாணவர்களை “சுட்டுக்கொல்லுங்கள்” என்று ஹசீனா உத்தரவிட்டதாகக் கூறப்படும் ஆடியோ ஒன்று சர்ச்சையை கிளப்பியது. இதை அடிப்படையாகக் கொண்டு அவருடன் முன்னாள் உள்துறை அமைச்சர், முன்னாள் போலீஸ் IG ஆகியோர்கள் மீதும் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் வழக்குத்தொடர்ந்தது.இன்றைய தீர்ப்பளிப்பில் தீர்ப்பாயம் கடுமையாகக் கருத்து தெரிவித்துள்ளது:
ஹசீனா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, பெரும் அளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளார்.
போராட்டக்காரர்களை அடக்க ராணுவத்திற்கே நேரடியாக உத்தரவிட்டுள்ளார்.
ஹெலிகாப்டர் உள்ளிட்ட பலத்த ஆயுதங்களை பயன்படுத்தி மாணவர்களை தாக்க உத்தரவு வழங்கினார்.
மருத்துவ உதவியை கூட மறுக்கச் செய்ததால், கடந்த ஜூலை–ஆகஸ்ட் போராட்டங்களில் மட்டும் 1,400 பேர் உயிரிழந்தனர்; 24,000 பேர் படுகாயம் அடைந்தனர்.
போராட்டக்காரர்களை அவமதித்து, தூண்டிவிட்டு, திட்டமிட்டதாக தீர்ப்பாயம் கண்டறிந்துள்ளது.
இதனால், மனிதகுலத்துக்கு எதிராக குற்றங்களைச் செய்ததற்காக ஷேக் ஹசீனா குற்றவாளி என தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. அவருக்கு விதிக்கப்படும் தண்டனையின் விவரம் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை, ஆனால் வழக்கின் போது பலரும் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று வாதிட்டு உள்ளனர்.
English Summary
Sheikh Hasina grip justice even after coup Human rights violations proven