வெட்கம்! காவலரையே தாக்கும் துணிச்சல் ரவுடிகளுக்கு ஏற்பட காரணம் திமுக...! - ஓபிஎஸ்
Shame reason why rowdies dare attack policeman DMK OPS
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 'திருப்பூர் காவலர் சண்முகவேல் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி' அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது,"திருப்பூர் மாவட்டம் குடிமங்கலத்திற்குட்பட்ட பண்ணை வீட்டில் பணிபுரிந்து வந்த தந்தை மகன்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக சென்ற குடிமங்கலம் காவல் நிலையத்தைச் சேர்ந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

உயிரிழந்த சண்முகவேல் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் மூர்த்தி மற்றும் அவருடைய இரண்டு மகன்கள் பணிபுரிந்து வருவதாகவும், இவர்களுக்கிடையே நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தகராறில் மூர்த்தி அவர்களை அவரது மகன் தங்கபாண்டியன் தாக்கியதாகவும் இதுகுறித்து அருகிலிருந்தவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் மற்றும் காவலர் அழகுராஜா ஆகியோர் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று அவர்களை விலக்கிவிட்டு, காயமடைந்த மூர்த்தியை மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த தங்கபாண்டியன் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பித்துவிட்டதாகவும் ஊடகங்களில் செய்தி வந்துள்ளது பேரதிர்ச்சியை அளிக்கிறது.
இந்தக் கொலைக்கு மூலக் காரணம் மது என்றும் தெரிவிக்கப்படுகிறது.கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பட்டப்பகலில் படுகொலைகள், கொள்ளைகள், போதைக் கலாச்சாரம், பாலியல் துன்புறுத்தல்கள் என சட்டம் ஒழுங்கு சீரழிவுகள் தமிழ்நாட்டில் அன்றாடம் நடந்து கொண்டிருக்கின்றன.
மொத்தத்தில் காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத அவல நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது. காவல் துறையினரையே தாக்கும் துணிச்சல் ரவுடிகளுக்கு ஏற்படுகிறது என்றால், அந்த அளவுக்கு மென்மையானப் போக்கினை தி.மு.க. அரசு கடைபிடிக்கிறது. இதற்கு முழுக் காரணம் தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைதான்.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பும். மாண்புமிகு முதலமைச்சர் சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் தனிக் கவனம் செலுத்தி, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேலை வெட்டிக் கொலை செய்த குற்றவாளிகள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற குற்றச் செயல்கள் நிகழாமல் இருக்கவும் உயிரிழப்புகளுக்கு மூலக் காரணமாக விளங்கும் மதுவை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். இது தற்போது அரசியல் ஆர்வலர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
English Summary
Shame reason why rowdies dare attack policeman DMK OPS