செந்தில் பாலாஜி ஜாமீன் கிடைக்குமா? சென்னை நீதிமன்றத்தில் இன்று விசாரணை!
Senthil Balaji bail plea hearing in Chennai Principal Sessions Court today
சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. கடந்த ஜூன் 15ஆம் தேதி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு பிறகு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் புழல் சிறையில் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன் பிறகு அமலாக்கத்துறை தரப்பிலிருந்து 3000 பக்கங்கள் கொண்ட குற்ற பத்திரிகை மற்றும் சாட்சியங்கள் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து இந்த வழக்கு எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக்கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த ஜாமீன் மனுவை நிராகரித்த சிறப்பு நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்குவது குறித்து முதன்மை அமர்வு நீதிமன்றமே விசாரிக்கும் என தெரிவித்து தள்ளுபடி செய்தது. இதனால் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை எந்த நீதிமன்றம் விசாரிக்கும் என்று குழப்பம் நிலவியது.
இதனால் செந்தில் பாலாஜி தரப்பு சென்னை உயர் நீதிமன்ற இரு நபர் அமர்வின் முன்பு முறையிட்டது. அந்த அமர்வில் இருந்தும் நீதிபதி சக்திவேல் விலகியதால் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் செந்தில் பாலாஜி தரப்பு முறையிட்டது.
இதனை அடுத்து செந்தில் பாலாஜி தரப்பின் முறையீட்டை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் எனவும், செந்தில் பாலாஜியின் மீதான வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியதை ரத்து செய்து இந்த வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமே விசாரிக்கும் என உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவானது இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வரவுள்ளது. இன்று நடைபெறும் விசாரணையின் போது செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கும் என அவரது தரப்பினர் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.
English Summary
Senthil Balaji bail plea hearing in Chennai Principal Sessions Court today