இது இசுலாமியர் பிரச்சினை மட்டுமல்ல, இனத்தின் உரிமை பிரச்சினை தன்மான பிரச்சினை! - சீமான் சீற்றம்.! - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினைக் காரணமாகக் காட்டி விடுதலை செய்ய முடியாது என அரசாணை வெளியிட்டுள்ள திமுக அரசின் மதவாதப்போக்கைக் கண்டித்தும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு 30 ஆண்டுகளாகச் சிறைக்கொட்டடியில் வாடும் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய 161வது சட்டப்பிரிவின்படி மாநில அரசுக்கே அதிகாரமிருக்கும்போது குடியரசுத்தலைவருக்குக் கடிதமெழுதி மாநிலத் தன்னுரிமையையும், தன்னாட்சியையும் காவுகொடுத்திருக்கும் திமுக அரசின் வஞ்சகப் போக்கைக் கண்டித்தும், 12.12.2021 அன்று காலை 10 மணியளவில், சென்னை - வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைத்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வழக்கறிஞர் இராவணன், விருகை ராஜேந்திரன், அன்வர் பேக், நாம் தமிழர் தொழிற்சங்கத் தலைவர் அன்புத்தென்னரசன் மற்றும் செயலாளர் வழக்கறிஞர் சுரேஷ்குமார், உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சின்னண்ணன், கோவை அப்துல் வகாப், சென்னை புகழேந்திமாறன், செய்திப்பிரிவுச் செயலாளர் பாக்கியராசன், தலைமை நிலையச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட மாநில, மாவட்ட, தொகுதி, பாசறைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்தவர்களும் பெருந்திரளாகப் பங்கேற்று இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலை மற்றும் எழுவரின் விடுதலையை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

அதனைத்தொடர்ந்து, மருது மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் செ.முத்துப்பாண்டி, இந்திய தேசிய லீக் நிர்வாகி கோவை நாசர், தமிழ் தேசிய கிறித்துவர் இயக்கம் அருட்தந்தை மை.பா. சேசுராஜ், வனவேங்கைகள் கட்சி தலைவர் இரணியன், தமிழர் நலப் பேரியக்கத் தலைவர் மு.களஞ்சியம், ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் பொதுச்செயலாளர் அ.வினோத், தமிழ் தேசத் தன்னுரிமை கட்சித் தலைவர் அ.வியனரசு ஆகியோரும், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹூமாயூன் கபீர், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் துருவன், சல்மான், மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கோவை கார்த்திகா, மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் இடும்பாவனம் கார்த்திக், அபூபக்கர் சித்திக் ஆகியோரும் கண்டனவுரையாற்றினர்.
 
நிகழ்வின் இறுதியாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கண்டனப் பேருரையாற்றினார். அதன் சுருக்கம் பின்வருமாறு,

கனத்த இதயத்தோடு நாம் இந்தக் களத்திலே நின்றுகொண்டிருக்கிறோம். இருபதாண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடுகின்ற நம்முடைய இசுலாமியச் சொந்தங்களை விடுதலை செய்யக்கோரியும், முப்பதாண்டுகளாகச் சிறையில் வாடிக்கொண்டிருக்கின்ற அக்கா நளினி உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி நடைபெறுகிற ஆர்ப்பாட்டம் இது. அநீதியைக் கண்டு அச்சம் கொள்ளாமல் துணிந்து எதிர்த்துப் போராடுகிறவன் எவனோ அவனே உண்மையான புனிதப்போராளி என்கிறார் நபிகள் நாயகம் அவர்கள்.

இசுலாமியக் கைதிகளுக்கும் சீமானுக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறார்கள்? எனக்கு இல்லாத தொடர்பு இந்த நிலத்தில் எவருக்கும் இல்லை. புழலைத் தவிரத் தமிழ்நாட்டின் பல சிறைகளில் நான் இருந்துள்ளேன். எல்லாச் சிறைகளிலும் இசுலாமிய சிறைவாசிகள் அனைவருடனும் நான் வாழ்ந்துள்ளேன். தம்பி ரிஸ்வான் இறுதி நிகழ்வில் நான் கலந்துகொண்டபோது, அவருடைய தாய், தங்கைகள் கதறிய காட்சிகள் இன்னும் என் கண்ணில் நிற்கிறது. அந்தக் கண்ணீர் காட்சிகள் என் கண்ணை விட்டு என்றும் மறையாது. அவரைப்போன்ற மற்றொரு சிறைவாசி ஐயா அபுதாகிர் உடல் சோர்ந்து, பார்வை மங்கி, சிறுநீரகம் பழுதுபட்டு மருத்துவமனையில் படுத்திருக்கும்போது அவரைச் சென்று பார்த்தேன். என் கையைப் பிடித்துக்கொண்டு கண்ணீர் சிந்தினார். 

பல்லாயிரம் வலிகளைத் தாங்கி நாம் நிற்கிறோம். மக்களுடைய பிரச்சனைகளை அரசு கையிலெடுக்காதபோது மக்கள் அரசை கையிலெடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. இந்தப் போராட்டத்தினை நடத்தினால் இசுலாமியர் அனைவரும் எங்களுக்கு வாக்கு செலுத்திவிடுவார்கள் என்பதால் நடத்தவில்லை. இது என் பிறவிக் கடமை அதனால் செய்கிறேன். இது இசுலாமியர் பிரச்சினையோ, ஏழு தமிழர் பிரச்சினையோ மட்டுமல்ல. இது இனத்தின் உரிமை பிரச்சினை, தன்மான பிரச்சினை.

திராவிட ஆட்சியாளர்கள் செய்த துரோகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இத்தனை இசுலாமியச் சிறைவாசிகளையும் கைது செய்து சிறையில் அடைத்த பெருந்தகை ஐயா கருணாநிதிதான். தமிழ்நாடு சட்டசபையில் முதன் முதலாக இசுலாமியர் தீவிரவாதிகள் என்ற வார்த்தையைப் பதிவு செய்த பெருந்தகையும் அவர்தான். ஐயா தா.கிருட்டிணனை, அம்மா லீலாவதியை கொலை செய்த திமுகவினரை விடுதலை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் கொண்டு வரப்பட்டதுதான் பத்தாண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை பெற்ற சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற அரசாணை. 

அவர்களை விடுதலையும் செய்துவிட்டார்கள். ஆனால் அந்த விடுதலை அறிவிப்பு ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும், இசுலாமியச் சிறைவாசிகளுக்கும் பொருந்தாது என்று அந்த அரசாணையில் குறிப்பிட்ட திமுக அரசு இசுலாமியச் சிறைவாசிகளை விடுதலை செய்யும் என்று எப்படி நம்ப முடியும்? 

குஜராத் கலவரத்தில் பல்லாயிரக்கனான இசுலாமியர்களைக் கொன்று குவிக்கும்போது அந்தப் படுகொலையை ஆதரித்து இந்திய நாடாளுமன்றத்தில் பேசியதும் டிஆர்.பாலு, முரசொலிமாறன் உள்ளிட்ட திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும்தான். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இறுதித் தீர்ப்பு எப்படி வந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு வெளியாகும் முன்பே அறிக்கை வெளியிட்டவர் ஐயா ஸ்டாலின் அவர்கள். ஆர்.எஸ்.எஸ் தலைவர் கொடுத்த அறிக்கையும், மு.க.ஸ்டாலின் கொடுத்த அறிக்கையும் ஒரே மாதிரியாக இருந்தது.

இசுலாமியச் சிறைவாசிகள் விடுதலை என்பது மதம் சார்ந்த பிரச்சினை இல்லை. இனம் சார்ந்த பிரச்சினை. மனித உரிமை சார்ந்த பிரச்சினை. இசுலாமியர் என்பதாலேயே அவருக்குக் கிடைக்க வேண்டிய நீதி மறுக்கப்பட்டு அநீதி இழைக்கப்படுமாயின் அதை எதிர்த்துப் போராடவேண்டியது ஒவ்வொரு தமிழ் மகனின் கடமை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். யார் நிலத்தில் வந்து யார் விடுதலையை யார் தீர்மானிப்பது? சிறுபான்மை மக்களின் பாதுகாவலர்கள் திமுக தான் என்று சொல்லி சொல்லி, கடைசியில் சிறையில் அடைத்து வைத்துப் பாதுகாக்கிறார்கள்.

இசுலாமியர் விடுதலை குறித்து அம்மையார் ஜெயலலிதாவிடம் கோரிக்கை விடுத்தபோது அது எங்கள் கொள்கை முடிவே இல்லை என்றார். திமுகவுக்கோ அது கொள்கையே இல்லை. எதிர்க்கட்சியாக இருக்கும்போது எழுவர் விடுதலையைச் சாத்தியப்படுத்த முடியாதா? என்று கேள்வி எழுப்பியவர் ஐயா ஸ்டாலின்தான். 

ஆனால் நாங்கள் நேரில் சென்று வலியுறுத்தியபோது வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது என்று தட்டிக் கழித்துவிட்டார். அதேபோல் இசுலாமியச் சிறைவாசிகளை விடுதலை செய்வதற்காவது திமுகவிற்கு வாக்களியுங்கள் என்று தேர்தல் பரப்புரையின்போது பேசிவிட்டு, தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு அதைப் பற்றி வாயே திறக்கவில்லை.

ஐயா எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலத்தில் 100 பேர் விடுதலை செய்யப்பட்டார்கள். ஒருவர் கூட இசுலாமியர் இல்லை. இப்போது திமுக ஆட்சிக்காலத்தில் 700 பேர் விடுதலை செய்யப்பட்டார்கள். ஒருவர் கூட இசுலாமியர் இல்லை. கேட்டால் சட்டம் அப்படி இருக்கிறது என்கிறார்கள். அந்தச் சட்டத்தை இயற்றியவர்களே இந்தத் திராவிட ஆட்சியாளர்கள்தானே. 

திரும்பப் பெறமுடியாது என்று சொன்ன வேளாண் சட்டங்களைத் தொடர்ச்சியாகப் போராடித் திரும்பப்பெறச் செய்ததுபோல், இசுலாமியர் விடுதலையை வலியுறுத்தியும் மாவட்டங்கள் தோறும் தொடர்ச்சியாகப் போராட நாங்கள் தயாராக உள்ளோம். மதவாதத்திற்கு எதிரானவர்கள் தாங்கள் என்று திமுக சொல்வது உண்மையானால் மதவாதத்திற்கு எதிராக வாழ்நாளின் இறுதி நொடிவரை போராடி அதற்காக உயிர்ப்பலியான பழனிபாபா அவர்களின் நினைவுநாளை அரசு நிகழ்வாக முன்னெடுக்க வேண்டும்.

இசுலாமிய மக்களின் வாக்கு வேண்டும், அவர்களின் வாழ்க்கை வேண்டாம். இசுலாமிய மக்களின் ஓட்டு வேண்டும். அவர்களின் உரிமை வேண்டாம் என்று திமுக செயல்படுவது மிகப்பெரிய கொடுமை. இசுலாமியச் சிறைவாசிகளை விடுதலை செய்வதில் என்ன சிக்கல் உள்ளது என்பதை திமுக அரசு தெளிவுபடுத்த வேண்டும். கொளத்தூரில் புதிதாகத் தொடங்கப்பட்ட அரசுக் கலைக்கல்லூரியில் இந்துக்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்று திமுக அரசு அறிவித்ததுதான் இந்துத்துவம். அதை எதிர்த்து குரல் கொடுத்தது நாம் தமிழர் கட்சி மட்டும்தான். பிரச்சினைகளின் அடிப்படையில் பாஜகவிற்கு ஆதரவளிப்போம் என்கிறது திமுக. 

இங்குப் பிரச்சினையே பாஜகதான். காஷ்மீரை ஒன்றிய பாஜக அரசு மூன்றாகப் பிரித்தபோது பிரித்ததில் தவறில்லை, பிரித்த விதத்தில்தான் தவறு என்று கூறியவர் ஐயா ஸ்டாலின் அவர்கள். இசுலாமிய, கிறித்துவ மக்களுக்கு திமுக செய்த ஒரு நன்மை ஏதாவது உண்டா? 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் இசுலாமியச் சிறைவாசிகளை விடுதலை செய்கின்ற இந்த ஒரு நன்மையையாவது திமுக செய்ய வேண்டும்.

நாம் தமிழர் கட்சிக்கு அதிகாரத்தைக் கையளித்தால் மக்களின் பிரச்சனையைத் தீர்ப்போம். இல்லையென்றால் மக்களின் பிரச்சினைக்காக வீதியில் நின்று போராடுவோம். இது எங்கள் பிறவிக் கடமை என்ற நிறைவோடு செய்கின்றோம். இசுலாமியர்கள் என்றாலே பயங்கரவாதி, தமிழர்கள் என்றாலே பயங்கரவாதி என்ற சமூக உளவியலை முதலில் மாற்ற வேண்டும். 

வாக்களித்து ஆட்சியில் அமர்த்திய இசுலாமிய மக்களுக்குச் செலுத்த வேண்டிய நன்றி கடனுக்காவது திமுக அரசு இசுலாமியச் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும். விடுதலை செய்யாவிட்டால் வரலாறு திமுகவை விடுதலை செய்யாது. ஒரு நாள் மக்கள் மன்றத்தில் இதற்கு திமுக பதில் சொல்லியாக வேண்டிய நிலையை உருவாக்குவோம்.

எனவே திமுக அரசு, இசுலாமியச் சிறைவாசிகளது குடும்பங்கள், அவர்களின் பிள்ளைகள் நாள் தோறும் சிந்தும் கண்ணீர்த் துளிகளைத் துடைக்கவாவது அவர்களை விடுதலை செய்ய வேண்டும். அரசுக்கு நெருக்கடியைக் கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு இந்தப் போராட்டத்தைச் செய்யவில்லை. சிறைவாசிகளின் விடுதலையை வேண்டியே போராட்டத்தை முன்னெடுக்கிறோம். 

முன்னாள் சிறைவாசியான தம்பி கோவை நாசர் பேசும்போது, இரு கைகளைத் துணையாகக் கேட்டார். நாங்கள் எங்கள் உயிரையே கொடுக்க ஆயத்தமாக இருக்கிறோம். ஏனென்றால் உயிர் உன்னதமானதுதான், ஆனால் அதைவிட உன்னதமானது இனத்தின் உரிமை, விடுதலை, அதன் பெருமை என்று கற்பித்த தலைவனின் பிள்ளைகள் நாங்கள். உயிரை இழப்பது ஒருவரின் தனிப்பட்ட இழப்பு. ஆனால் உரிமையை இழப்பது ஒட்டுமொத்த இனத்திற்கான இழப்பு. 

அதனால் உயிரைக் கொடுத்தேனும் உரிமையை மீட்போம். இந்த ஆர்ப்பாட்டம் ஒரு தொடக்கம்தான். அடுத்தகட்ட போராட்டங்களுக்கான முன்னறிவிப்புதான். நம்முடைய தாய், தந்தையரும் உடன் பிறந்தார்களும் சிந்துகின்ற கண்ணீரைத் துடைப்பதற்குப் போராட்டங்களைத் தவிர, வேறு வழிகிடையாது. எனவே கோரிக்கைகள் வெல்லும்வரை தொடர்ச்சியாகப் போராடுவோம்."

இவ்வருது அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

seeman say about islam people release issue


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->