தமிழையும், தமிழர்களையும் வஞ்சிப்பதுதான் திராவிட மாடலா? - சீமான் கண்டனம்.! - Seithipunal
Seithipunal


சிதம்பரம் நடராசர் கோயிலில் தமிழில் வழிபாடு செய்ய அனுமதிக்க மறுக்கும் தீட்சிதர்களுக்கு ஆதரவாய் நின்று, தமிழையும், தமிழர்களையும் வஞ்சிப்பதுதான் திராவிட மாடலா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "சிதம்பரம் நடராசர் கோயிலிலுள்ள திருச்சிற்றம்பலம் மேடையில் தேவாரமும், திருவாசகமும் ஓதி, தமிழில் வழிபாடு செய்ய, அனுமதிக்கக் கோரிப் போராடுவதற்கு விதிக்கப்பட்டத் தடை, கடும் எதிர்ப்புக்குப் பின் விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறதென்றாலும், ‘எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!’ எனும் முழக்கத்தை முன்வைத்து, ஆட்சிக்கு வந்த திமுகவின் அரசாட்சியின் கீழ் தமிழில் வழிபாடு செய்யவே போராட வேண்டிய நிலையிருப்பதும், அதற்கே அனுமதி மறுத்து, தடைவிதித்துப் பின், திரும்பப் பெறுவதுமானக் கெடுபிடியானப் போக்குகள் கடும் கண்டனத்திற்குரியது.

சோழ மன்னர்களால் கட்டப்பட்ட சிதம்பரம் நடராசர் கோயிலை இன்றைக்கு தில்லை தீட்சிதர்கள் தங்களுக்கு மட்டுமே சொந்தமான கோயிலெனக்கூறி , அடாவடித்தனம் செய்வதும், தமிழில் வழிபாடு செய்யவிடாது அட்டூழியங்களை அரங்கேற்றுவதும் ஏற்கவே முடியாப் பெருங்கொடுமையாகும். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் எனும் சைவ சமயக்குரவர்கள் நால்வரால் பாடப்பெற்ற தலமான நடராஜர் கோயிலிலுள்ள திருச்சிற்றம்பலம் மேடையில் ஏறி, தேவாரமும், திருவாசகமும் பாடி, தமிழில் மெய்யியல் வழிபாடு செய்ய முயன்றதற்காக சிவனடியார் ஐயா ஆறுமுகசாமி அவர்களைத் தாக்கிய தீட்சிதர்கள், அதுபோலவே, அண்மைக்காலத்தில் திருச்சிற்றம்பலம் மேடையிலேறி தமிழில் வழிபாடு செய்ய முயன்ற பெண் பக்தர் ஒருவரை சாதிவெறியோடு பேசி, அத்துமீறி அவமதித்து, வெளியே அனுப்பினர். 

அப்பெண் புகார் கொடுத்து, 20 தீட்சிதர்கள் மீது வன்கொடுமைச்சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்ட நிலையில் இதுவரை அவர்களில் ஒருவரைக்கூடக் கைதுசெய்யாதது திமுக அரசின் கையாலாகத்தனத்தையே காட்டுகிறது. நீதியென்பது எல்லோருக்கும் ஒன்று என்பதுதானே சமூக நீதி! அதில் தீட்சிதர்களுக்கு மட்டும் என்ன விதிவிலக்கு? எதற்கு இந்த பாரபட்சமானப்போக்கு? சமூக நீதியைப் பேசி அதிகாரத்திற்கு வந்த திமுக அரசு, மனுநீதியின் பக்கம் நிற்பது எந்தவிதத்தில் நியாயம்? 

பிரதமர் மோடியின் மதவழிபாட்டு நிகழ்வுகளை தமிழக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழுள்ளக் கோயில்களில் திரையிட்டு ஒளிபரப்ப, பாஜகவினருக்கு அனுமதி வழங்கிய திமுக அரசு, நடராசர் கோயிலின் திருச்சிற்றம்பலம் மேடையில் தேவாரம், திருவாசகம் பாட வழிவகை செய்யாது, கெடுபிடி விதிப்பது வெளிப்படையான ஆரிய அடிவருடித்தனமில்லையா? 

தமிழில் வழிபாட்டை முற்றாக மறுக்கும் ஆரிய மேலாதிக்கத்துக்கு ஆதரவாய் நின்று தமிழர்களை வஞ்சிப்பதுதான் திராவிட மாடலா? 

வழக்குத்தொடுக்கப்பட்டும் தீட்சிதர்களைக் கைதுசெய்யாத திமுக அரசு, தமிழ் வழிபாடு கோருவோரைக் கைதுசெய்வதும், போராட்டத்துக்கு அனுமதி மறுப்பதுமான செயல்களில் ஈடுபடுவது வெட்கக்கேடானது. தமிழர்களின் கோயிலில் தமிழர் மூதாதை நந்தன் உள்நுழைந்த தெற்கு வாயில் இன்றுவரை அடைக்கப்பட்டு, தீண்டாமைச்சுவராகக் காட்சியளிப்பதும், திருச்சிற்றம்பலம் மேடையில் நின்று தமிழில் வழிபாடு செய்யவே போராட வேண்டிய இழிநிலை இருப்பதும் தமிழர்களுக்கு நேர்ந்திருக்கிறப் பெருந்துயரமாகும்.

ஆகவே, தமிழர்களுக்குரிய மெய்யியல் தளமான சிதம்பரம் நடராசர் கோயிலைச் சிறப்புச்சட்டமியற்றி, அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர வேண்டுமெனவும், அதன்மூலம் தமிழில் வழிபாடு செய்ய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமெனவும், வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ள தில்லை தீட்சிதர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன். 

இத்தோடு, தீண்டாமைச்சுவராகக் காட்சியளிக்கும் நந்தன் நுழைந்த தெற்கு வாயிலைத் திறக்க வேண்டுமெனவும், நந்தன் பெயரில் அக்கோயிலில் மணிமண்டபம் கட்டியெழுப்ப வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seeman Say about chidambaram nadarajar temple issue


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->