மாற்றுக் கட்சித் தலைவர்களுக்கு சீட், பதவி… எங்களுக்கு இதயத்தில் மட்டும் இடமா? OG உடன்பிறப்புகள் குமுறல்! - Seithipunal
Seithipunal


2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தனது பலத்தை அதிகரிக்கும் நோக்கில், அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளில் இருந்து முக்கிய நிர்வாகிகளை தீவிரமாக தட்டி தூக்கி வருகிறது. அவர்களுக்கு அவர்கள் கேட்ட தொகுதிகள், அரசியல் பாதுகாப்பு, கட்சிப் பதவிகள் என வாரி வழங்கப்படுவதால், திமுகவில் பல ஆண்டுகளாக உழைத்து வந்த உடன்பிறப்புகள் மனதுக்குள் பெரும் அதிருப்தியுடன் புழுங்கிக் கொண்டிருப்பதாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த முக்கிய ஆதரவாளர்கள் திமுக அமைச்சர்களின் ஏற்பாட்டில் அடுத்தடுத்து கட்சியில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது. மனோஜ் பாண்டியன், அன்வர் ராஜா, மருது அழகுராஜ், சுப்புரத்தினம் ஆகியோருக்குப் பிறகு தற்போது வைத்தியலிங்கமும் திமுகவில் இணைந்துள்ளார். இதன் மூலம் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்ற நிர்வாகிகள் பட்டியல் நாளுக்கு நாள் நீள்கிறது.

திமுக அமைச்சரவையைப் பார்த்தால், முத்துச்சாமி, ரகுபதி, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், ராஜகண்ணப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், எ.வ. வேலு, பி.கே. சேகர் பாபு உள்ளிட்ட பலர் அதிமுக பின்னணியிலிருந்து வந்தவர்கள். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் அதிமுக → அமமுக → திமுக என்ற பாதையில் வந்தவர். சொல்லப்போனால், தற்போது திமுக அமைச்சர்களில் மூன்றில் ஒருவர் அதிமுக அரசியல் பின்னணியைக் கொண்டவராக இருக்கலாம் என்ற பேச்சே கட்சிக்குள் நிலவுகிறது.

இதுவே இப்போது திமுகவில் “புகைச்சல்” ஏற்படுவதற்கான முக்கிய காரணமாக மாறியுள்ளது. மாற்றுக் கட்சிகளில் இருந்து வரும் பெருந்தலைவர்கள் கட்சியை பலப்படுத்த ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் வருவதில்லை என்றும், அவர்கள் கொள்கை அடிப்படையில் அல்ல; தங்களது அரசியல் எதிர்காலம், சொத்து பாதுகாப்பு, செல்வாக்கை உறுதி செய்துகொள்ளவே திமுகவில் இணைகிறார்கள் என்றும் பல உடன்பிறப்புகள் வெளிப்படையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

இதன் விளைவாக, பல ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்து வந்த பாரம்பரிய திமுகவினரின் தேர்தல் வாய்ப்புகள் கண்முன்னே நழுவிக் கொண்டிருப்பதாக அவர்கள் வேதனையுடன் பேசுகின்றனர். “கட்சியில் இணையும் முன்பே, மாற்றுக் கட்சித் தலைவர்கள் தங்களுக்கான தொகுதி, தேர்தல் வாய்ப்பு, அரசியல் பாதுகாப்பு அனைத்தையும் உறுதி செய்துகொண்டே வருகிறார்கள்” என சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.

அதிமுக முன்னாள் எம்எல்ஏ மனோஜ் பாண்டியனுக்கு அவரது ஆலங்குளம் தொகுதியையே திமுக ஒதுக்கப் போகிறது என்றும், சமீபத்தில் கட்சியில் இணைந்த வைத்தியலிங்கத்துக்கு ஒரத்தநாடு தொகுதி வழங்கப்படலாம் என்றும் பேசப்படுகிறது. அமமுகவில் இருந்து வந்த ஜமீன்தார் மாணிக்கராஜா, கோவில்பட்டி தொகுதியை நேரடியாக தலைமையிடம் கேட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சூழ்நிலையில், “மற்ற கட்சிகளில் இருந்து வந்தவர்களையே ஜெயிக்க வைத்து அமைச்சர்களாக்கினால், காலங்காலமாக கட்சிக்காக அடிபட்டு, மிதிபட்டு, உழைத்து வந்தவர்களுக்கு எப்போது நல்ல காலம் பிறக்கும்?” என்ற கேள்வி பரம்பரை திமுகவினரிடையே வலுவாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

திமுக ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் கட்சியில் இணைய விரும்பும் அரசியல் தலைவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும், அந்த வருகைகளை தலைமையகம் வரவேற்குவதும் ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் அடிப்படைத் தொண்டர்களின் மனநிலை முற்றிலும் வேறு திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. போஸ்டர் ஒட்டிய காலத்திலிருந்து அரசியல் பயணம் தொடங்கியவர்கள், ஊராட்சி–நகராட்சி–ஒன்றிய அரசியலில் அடிபட்டு வளர்ந்தவர்கள், தேர்தல் நேரங்களில் மட்டும் நினைவுக்கு வருபவர்களாக மாறிவிடுகிறோம் என்ற மனநிலை உருவாகியுள்ளது.

மாற்றுக் கட்சிகளில் இருந்து வரும் பெரிய முகங்களுக்கு மட்டும் சீட், பதவி, முக்கியத்துவம் கிடைத்தால், “பரம்பரை திமுகவினர்” என்ற அடையாளம் வெறும் வரலாற்றுச் சொல்லாக மட்டுமே மாறிவிடுமோ என்ற அச்சம் கட்சிக்குள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Seats positions for alternative party leaders is there room only in our hearts OG siblings grumble


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->