ஒரே நாளில் அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவு: பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! கெத்து காட்டிய அதிமுக!
Seat sharing decision in AIADMK alliance in one day Edappadi gave a blow to BJP BJP asked for 40 got 27 AIADMK showed its anger
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணியில் முக்கிய கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல நாட்களாக இழுபறியாக இருந்த பேச்சுவார்த்தைகள் ஒரே நாளில் முடிவடைந்தது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதன்படி, அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாமகவுக்கு 18 தொகுதிகளும், டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவுக்கு 11 தொகுதிகளும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் இந்த மூன்று கட்சிகளும் இரட்டை இலக்க தொகுதிகளைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
2026 தேர்தலை முன்னிட்டு பாஜக ஆரம்பத்தில் சுமார் 50 தொகுதிகள் வரை எதிர்பார்த்ததாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியானது. குறைந்தபட்சம் 39 தொகுதிகள் வேண்டும் எனவும் கட்சி தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இறுதியில் 27 தொகுதிகளிலேயே சமரசம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த தேர்தலில் பாஜக 2.62 சதவீத வாக்குகளைப் பெற்று 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் அண்ணாமலை மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு கட்சி வளர்ச்சி பெற்றுள்ளதாக பாஜக வட்டாரங்கள் கூறி வந்தன.
டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவுக்கு 11 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதும் அரசியல் ரீதியாக முக்கியமாக பார்க்கப்படுகிறது. 2021 தேர்தலில் அமமுக தனியாக 165 தொகுதிகளில் போட்டியிட்டு 2.35 சதவீத வாக்குகளைப் பெற்றது. பின்னர் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது. இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள 11 தொகுதிகள் மூலம் சட்டமன்றத்தில் மீண்டும் கால்பதிக்க அமமுக முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையில் அதிமுக கூட்டணியில் இன்னும் சில சிறிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தமாகா, புதிய நீதிக்கட்சி, ஐஜேகே, தம்முக உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒற்றை இலக்க தொகுதிகள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் தற்போது பாஜக, பாமக, அமமுக ஆகிய கட்சிகளுக்கு சேர்த்து 56 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள தொகுதிகளில் சிலவற்றை மற்ற கூட்டணி கட்சிகளுக்கு வழங்கிய பிறகு, அதிமுக சுமார் 165 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2021 தேர்தலில் அதிமுக 167 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், இந்த முறை 165க்கு அருகிலான எண்ணிக்கையை வைத்திருப்பது கூட்டணியை சமநிலையாக வைத்துக்கொண்டு கட்சியின் செல்வாக்கையும் பாதுகாக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி கணக்கிட்ட அரசியல் முடிவாக பார்க்கப்படுகிறது.
English Summary
Seat sharing decision in AIADMK alliance in one day Edappadi gave a blow to BJP BJP asked for 40 got 27 AIADMK showed its anger