நான் கடவுள் படம் முடிந்ததும் இயக்குனர் பாலா அவ்வளவு செய்தார்.. இயக்குநர் பாலாவின் மனிதநேயத்தை பகிர்ந்த சிங்கம்புலி!
Director Bala did so much after the film I Am God was finished Singhampuli shared Director Bala humanity
இயக்குநர் பாலா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான “வணங்கான்” திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும், நடிகர் அருண் விஜயின் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. ஆரம்பத்தில் இந்த படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் பின்னர் அவர் விலகியதால், அந்த கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடித்தார். இந்த நிலையில், பாலா அடுத்ததாக யாரை வைத்து படம் இயக்கப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ள சூழலில், இயக்குநரும் நடிகருமான சிங்கம்புலி பாலா குறித்து கூறிய ஒரு சம்பவம் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ் சினிமாவில் தனித்துவமான படங்களை இயக்கியவர்களில் முக்கியமானவர் இயக்குநர் பாலா. இயக்குநர் பாலுமகேந்திராவின் உதவி இயக்குநராக இருந்து தனது பயணத்தை தொடங்கிய அவர், பின்னர் சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனித்துவமான இடத்தை பிடித்தார். குறிப்பாக சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழும் மக்களின் வாழ்க்கையை தனது படங்களில் வெளிப்படுத்தியதன் மூலம் அவர் தனித்துவமான இயக்குநராக அறியப்பட்டார்.
பாலா தனது உச்சகட்டத்தில் இருந்த காலத்தில் பல முன்னணி நடிகர்கள் அவருடன் படம் செய்ய விரும்பினர். ஆனால் அவர் எப்போதும் தனது கதைக்கு பொருத்தமானவர்களையே தேர்வு செய்வார். எந்தவித சிபாரிசுகளையும் அவர் ஏற்கமாட்டார் என்பது திரையுலகில் அறியப்பட்ட விஷயமாகும்.
அவரது வாழ்க்கையில் பின்னர் சில தனிப்பட்ட மற்றும் தொழில்முறை சிக்கல்கள் ஏற்பட்டன. குறிப்பாக மனைவி மலருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். அதேபோல் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து இயக்கிய “வர்மா” திரைப்படம் வெளியாவதற்கு முன்பே நிராகரிக்கப்பட்டதும் அவருக்கு பெரிய அதிர்ச்சியாக அமைந்தது.
இந்த பிரச்சனைகளுக்குப் பிறகு சூர்யாவை வைத்து “வணங்கான்” படத்தை தொடங்கினார். ஆனால் சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட சூர்யா பின்னர் படத்திலிருந்து விலகினார். அதன் பிறகு அந்த படத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடித்தார். கடந்த ஆண்டு வெளியான அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.
இந்நிலையில், இயக்குநர் சிங்கம்புலி ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பாலாவின் மனிதநேயத்தை வெளிப்படுத்தும் ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், “நான் கடவுள் படத்தை எடுத்த பிறகு அதில் பிச்சைக்காரர்களாக நடித்தவர்களை பாலா சென்னைக்கு அழைத்து வந்தார். அவர்களை ஒரு ஸ்டார் ஹோட்டலில் தங்க வைத்து, மூன்று வேளையும் சிறப்பான உணவு கொடுத்து, தனியாக ஒரு பேருந்து ஏற்பாடு செய்து ஏழு நாட்கள் முழுவதும் சென்னையை சுற்றி காண்பித்தார். அதுமட்டுமல்லாமல் அவர்களை இசையமைப்பாளர் இளையராஜாவின் வீட்டுக்கு அழைத்து சென்று, அவருடன் புகைப்படம் எடுக்க வைத்ததுடன் பரிசுகளையும் கொடுக்க வைத்தார்.
இதையெல்லாம் ஏன் செய்கிறீர்கள் என்று நான் கேட்டபோது, ‘பாவம் டா… அவர்கள் இதையெல்லாம் எப்போது பார்க்கப்போகிறார்கள்?’ என்று பாலா சொன்னார்” என சிங்கம்புலி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் தற்போது அதிகமாக பகிரப்பட்டு, இயக்குநர் பாலாவின் மனிதநேயத்தை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
English Summary
Director Bala did so much after the film I Am God was finished Singhampuli shared Director Bala humanity