லாக்கப் டெத் ஆன சபரிவர்மன் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் மற்றும் தற்காலிக அரசுப் பணி..!
Sabarivarmans family gets Rs10 lakh relief and temporary government job
விசாரணைக் கைது சபரிவர்மன் நீதிமன்ற காவலில் நாகர்கோவில் சிறையில் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தற்காலிக அரசுப் பணியையும், ரூ. 10 லட்சம் நிவாரண நிதியையும் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.
சபரிவர்மன் எனும் மாற்றுத்திறனாளி வியாபாரி தனது கடையில் 200 கிராம் குட்கா வைத்திருந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டு நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு சபரிவர்மன் மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு, மர்ம மரணம் என வழக்குப் பதிவு செய்து இது குறித்து காவல்துறை விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

தொடர்ந்து, சபரிவர்மன் பிரேதப் பரிசோதனையில், அவரது உடலின் 19 இடங்களில் காயம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. குறிப்பாக வலது கை, கால்களிலும், இடது காலிலும், இடது நெஞ்சுப் பகுதியிலும், தலைப் பகுதியிலும் காயங்கள் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இந்த சபரிவர்மன் மர்ம மரணம் வழக்கில், சிறைக்காவலர்கள் 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் நாகர்கோவில் சிறையின் தலைமை வார்டன் ஜெகன், வார்டன்கள் சிவகுமார், திருவிடைநம்பி ஆகியோரை நேசமணிநகர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், அமைச்சர்கள் ஸ்ரீநாத், ராஜேஷ் குமார் ஆகியோர் இன்று சபரிவர்மனின் குடும்பத்தினரைச் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். அத்துடன், சபரிவர்மன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம், ஊரக வளர்ச்சித் துறையில் தற்காலிக அரசுப்பணி, 02 சென்ட் வீட்டு மனைப் பட்டா ஆகியவற்றை வழங்கியுள்ளனர்.
English Summary
Sabarivarmans family gets Rs10 lakh relief and temporary government job