தவெக ஆட்சியைக் கவிழ்க்க சதி..? நெறியாளர் விஜயனிடம் போலீஸார் விசாரணை என்ற பெயரில் அலைக்கழிப்பு செய்துள்ளதாக அரசியல் தலைவர்கள் கண்டனம்..!
Political leaders condemn police harassment of moderator Vijayan in the name of investigation
தவெக ஆட்சியைக் கவிழ்க்கும் சதியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பிரபல யூடியூபர் திருநாவுக்கரசுடனான வாட்ஸப் உரையாடல்களின் அடிப்படையில், மூத்த பத்திரிகையாளரும் புதிய தலைமுறை முதுநிலை ஆசிரியருமான விஜயனிடம் தமிழக காவல் துறையினர் விசாரணை செய்துள்ளனர்.
ஆனால், தனக்கு தெரிந்த விஷயங்களைத் தெரிவித்த பின்னரும், இரு நாட்களாக விசாரணை என்ற பெயரில் விஜயனை போலீஸார் அலைக்கழித்துள்ளதாக கூறி, அரசியல் கட்சித் தலைவர்களும், பத்திரிகையாளர் சங்கங்களும் தவெக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன. பல தொலைக்காட்சிகளிலும் விவாதங்களிலும் பங்கேற்று வந்த புதியதலைமுறையின் விவாதங்களிலும் பங்கேற்று வந்தார்.
இந்த விவாதங்களுக்குப் பேசவரும் பல விருந்தினர்களுடனும் தொழில்முறை உறவைப் பராமரித்து வந்த விஜயன், திருநாவுக்கரசுடனும் அத்தகைய உறவில் இருந்துள்ளார். அந்தச் சமயத்தில் இருவரும் வாட்ஸப்பிலும் உரையாடி வந்துள்ளனர். இந்நிலையில், தவெகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில் திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டுள்ளார். இது நடந்து இரு வாரங்கள் கடந்துள்ள நிலையில், விஜயனை விசாரணைக்கு வருமாறு நேற்று (ஜூலை 15) அன்று போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, நேற்று போலீஸாரைச் சந்தித்த விஜயன், அவர்கள் கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அளித்தாகவும், தன்னுடைய செல்பேசி உரையாடல்களையும் காட்டி வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. இருப்பினும் நள்ளிரவில் மீண்டும் அவரை அழைத்த போலீஸார் 02 மணி வரை அவரை விசாரணை என்ற பெயரில் அலைக்கழித்ததோடு, மறுநாளும் காலையிலிருந்து மாலை வரை காத்திருக்க வைத்திருந்தனர்.
இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பத்திரிகையாளர் சங்கங்களும் தமிழக காவல் துறைக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களிலும் விஜயனிடம் நடத்தப்பட்ட விசாரணை பேசும் பொருளாகியுள்ளது.
இதனைத்தொடர்ந்து ''விஜயனை காவல் நிலையத்துக்கு அழைத்து கண்ணியக்குறைவாக நடத்துவதும், அவரது அலைபேசியை பிடுங்கிவைத்துக் கொள்வதும் கடும் கண்டனத்திற்குரியது. அரசு மீதான விமர்சனங்களை பேசுபொருளாக மாற்றும் ஊடகவியலாளர்கள் குறிவைக்கப்படுவதும், அரசு கேபிளில் இருந்து காட்சி ஊடகங்கள் இருட்டடிப்பு செய்வதுமான போக்குகள் கருத்துரிமை மீது தொடுக்கப்படும் கோரத் தாக்குதலாகும்'' என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.
அடுத்தாக,''விசாரணை எனும் பெயரில் அராஜகமான முறையில், பத்திரிகையாளர் விஜயனின் தொலைபேசியை பறிமுதல் செய்திருக்கும் காவல் துறையின் செயல் கண்டிக்கத்தக்கது.
ஜனநாயக அடிப்படையில் விமர்சிக்கும் மாற்றுக்கட்சியினரைப் பழிவாங்கும் கீழ்மையான அரசியலை, தற்போது பத்திரிகையாளர்கள் மீதும் தவெக அரசு செய்ய தொடங்கிவிட்டது.'' என்று கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
''அரசியல் கண்ணோட்டத்துடன் எதிர்க்கட்சியினரை பழி வாங்குவது என்ற வரிசையில் தற்போது ஊடகவியலாளர் விஜயனை காவல்துறை குறி வைத்துள்ளது. கடத்தல் பாணியில் இழுத்துச் சென்று, விஜயன் எங்கே இருக்கிறார் என்பதே தெரியாத அளவுக்கு அலைக்கழிப்பதாகவும், சட்டத்தை மதிக்காத இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது'' என திமுக ஐ.டி.பிரிவு தெரிவித்துள்ளது.
''காவல் துறையின் அழைப்பின் பேரில் ‘புதிய தலைமுறை’ நெறியாளர் விஜயன் புதன் நள்ளிரவு திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் 2 முறை ஆஜரானதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சட்ட விதிகளைப் பின்பற்றாமல் அவருடைய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. காலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட விஜயன், காவல் நிலையத்தில் காக்க வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர்களை மிரட்டி, கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் காவல் துறையின் அராஜகப் போக்கை வன்மையாகக் கண்டிப்பதாகவும் சென்னை பத்திரிகையாளர் மன்றச் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளரை அச்சுறுத்துவதை நிறுத்த காவல் துறையினருக்கு முதல்வர் விஜய் உத்தரவிட வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.'' என்று அமமுக பொதுச்செயலர் தினகரன் விமர்சித்துள்ளார்.
English Summary
Political leaders condemn police harassment of moderator Vijayan in the name of investigation