கதாபாத்திரமாகவே மாறிய ஹீரோக்கள்: ரசிகர்களை வியக்க வைத்த ‘டிரான்ஸ்ஃபர்மேஷன்’ கதைகள்!தமிழ் சினிமாவின் ரியல் கிங்ஸ்!
Heroes who became characters Transformation stories that amazed fans The real kings of Tamil cinema
தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் ஹீரோயின்களை காப்பாற்றுவது அல்லது காதல் காட்சிகளில் நடிப்பது மட்டுமல்ல, ஒரு கதாபாத்திரமாகவே மாறி ரசிகர்களை நம்ப வைப்பதற்காக அவர்கள் எடுக்கும் அர்ப்பணிப்புதான் அவர்களை வேறொரு உயரத்திற்கு கொண்டு செல்கிறது. சில நடிகர்கள் தங்களை மறந்து, அவர்கள் ஏற்ற கதாபாத்திரமாகவே மாறி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளனர். அப்படிப்பட்ட சில ஹீரோக்களின் மாற்றங்களைப் பற்றி பார்க்கலாம்.
கமல்ஹாசன்
டிரான்ஸ்ஃபர்மேஷன் என்றாலே முதலில் நினைவிற்கு வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன். தமிழ் சினிமாவில் அழகான நடிகராகவும் பல பெண்களின் கனவு நாயகனாகவும் இருந்த காலத்திலேயே 16 வயதினிலே படத்தில் வெறும் கோவணத்துடன் சப்பானி கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்தார். மேலும் தசாவதாரம் படத்தில் ஜார்ஜ் புஷ் முதல் கிருஷ்ணவேணி பாட்டி வரை 10 விதமான கதாபாத்திரங்களில் நடித்தது அவரது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் 4 முதல் 5 மணி நேரம் மேக்கப் போட்டுக்கொண்டு, படப்பிடிப்பு முழுவதும் சாப்பிட முடியாமல் ஜூஸ் மட்டுமே குடித்து நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சியான் விக்ரம்
உடலை அர்ப்பணித்து நடிப்பதில் பெயர் பெற்றவர் சியான் விக்ரம். டப்பிங் கலைஞராக இருந்து நடிகராக உயர்ந்த இவர், ஷங்கர் இயக்கிய ஐ படத்திற்காக கடுமையான உடல் மாற்றங்களை செய்தார். பாடி பில்டராக இருந்து மாடலாகவும், பின்னர் 50 கிலோக்கும் குறைவான எடையுடன் நோயாளி போலவும் தோன்றினார். அந்த படத்தில் தினமும் 10 முதல் 11 மணி நேரம் மேக்கப் போட வேண்டியிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் தங்கலான் படத்திற்காகவும் உடல் எடையை குறைத்து கடுமையாக உழைத்தார்.
சூர்யா
பேரழகன் படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்தார். அதில் உடல் குறைபாடு கொண்ட கதாபாத்திரமாக நடித்ததற்காக உடல் அமைப்பையும் குரலையும் மாற்றி நடித்தார். இரண்டு கதாபாத்திரங்களுக்கும் தெளிவான வித்தியாசத்தை காட்டிய அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அதேபோல் கங்குவா படத்திற்காகவும் இரண்டு வருடங்களுக்கு மேல் உடல் எடையை மாற்றி கடுமையாக உழைத்தார்.
விஷால்
அவன் இவன் படத்தில் விஷால் மறுகண் கொண்டவராக நடித்தார். அந்த கதாபாத்திரத்திற்காக அவர் கண் அமைப்பை மாற்றி நடித்தது பெரும் கவனத்தை ஈர்த்தது. அந்த நடிப்பு காரணமாக இன்றுவரை தலைவலி பிரச்சனை ஏற்பட்டதாக அவர் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
திரையில் நாம் காணும் சில நிமிடங்களுக்குப் பின்னால் நடிகர்கள் செலுத்தும் அர்ப்பணிப்பு, உடல் உழைப்பு மற்றும் தியாகம் மிகப் பெரியது. அந்த அர்ப்பணிப்புதான் ஒரு கதாபாத்திரத்தை உண்மையானதாக மாற்றி ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கச் செய்கிறது.
English Summary
Heroes who became characters Transformation stories that amazed fans The real kings of Tamil cinema