400 குடும்பங்களைத் தத்தெடுத்த ராஷ்மிகா மந்தனா.. ஓராண்டுக்கு மளிகைப் பொருட்கள் வாங்க உதவி! நெகிழ வைத்த செயல்! - Seithipunal
Seithipunal


நடிகை ராஷ்மிகா மந்தனா 400 குடும்பங்களைத் தத்தெடுத்து, அவர்களின் அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் தேவைக்காக உதவி செய்ய முன்வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அடுத்த ஓராண்டுக்கு இந்த உதவியைத் தொடரத் திட்டமிட்டுள்ளதாகவும், சமூகத்துக்கு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய விரும்புபவர்களுக்கு இந்த முயற்சி ஓர் உந்துதலாக அமையும் என்று நம்புவதாகவும் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ராஷ்மிகாவின் இந்த அறிவிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, தற்போது ‘ரணபலி’ படத்தின் மூலம் மீண்டும் கவனம் பெற்றுள்ளார். இந்தப் படத்தில் அவர் ஏற்று நடித்துள்ள ஜெயம்மா கதாபாத்திரத்துக்கும் தனது இயல்புக்கும் சில ஒற்றுமைகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அந்தக் கதாபாத்திரம் தன்னிடம் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும், தான் மேற்கொண்டு வரும் சமூக உதவிகள் குறித்தும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில் அவர் மனம் திறந்துள்ளார்.

அந்தப் பதிவில், “நாம் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் ஏதோ ஒரு வகையில் நம்மைப் பாதிக்கின்றன அல்லது நம்மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனக்கும் ஜெயம்மா கதாபாத்திரத்துக்கும் ஏதாவது ஒற்றுமை இருக்கிறதா என்று பலரும் கேட்கிறார்கள். அவர்களுக்கான எனது பதில், ‘ஆம்’ என்பதுதான். அந்த ஒற்றுமைகளில் இதுவும் ஒன்று. எனது இயல்பாக இருக்கும் இந்த விஷயம், ஜெயம்மாவின் இயல்பாகவும் இருக்கிறது” என்று ராஷ்மிகா குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதுவரை தான் செய்து வந்த உதவிகளைப் பொதுவெளியில் பகிர்ந்து கொள்ளாமல் இருந்ததாகவும், தனக்கும் தனது குழுவைச் சேர்ந்த சிலருக்கும் தெரிந்தால் போதும் என்று நினைத்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், சமூகத்துக்குப் பங்களிக்க விரும்பும் மற்றவர்களுக்கும் தனது முயற்சி ஓர் உத்வேகமாக அமைய வேண்டும் என்பதற்காகவே தற்போது இதைப் பகிர்ந்து கொள்வதாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “உதவியை நாம் ஏன் இப்போதே தொடங்கக் கூடாது என்று நினைத்தேன். இன்று நான் 400 குடும்பங்களைத் தத்தெடுத்துள்ளேன். இந்த 400 குடும்பங்களுக்கும் மளிகைப் பொருட்கள் வாங்குவதற்கான உதவிகளை அடுத்த ஓராண்டுக்குத் தொடர்ந்து வழங்க இருக்கிறேன். மளிகைப் பொருட்களுக்காகச் செலவிட வேண்டிய தொகையை அவர்கள் சேமித்து, தங்களின் எதிர்காலத் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

ஒருவரின் வாழ்க்கையில் சிறிய கருணைகூட மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், உதவி என்பது எப்போதும் பெரிய அளவில் இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் ராஷ்மிகா குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு பெரிய மாற்றத்துக்கும் ஒரு சிறிய தொடக்கமே அடிப்படையாக அமைகிறது என்பதையும் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

தனது திரைப்பயணத்தில் சந்தித்த சவால்களையும் நினைவுகூர்ந்துள்ள அவர், “கடந்த சில ஆண்டுகளாக எனக்கு ஏற்பட்ட உறக்கமில்லாத இரவுகள், காயங்கள், போராட்டங்கள், வலிகள், கண்ணீர் என அனைத்துக்கும் ஈடாக இந்த மக்களின் சிரிப்பு அமைந்திருக்கிறது. இது விலைமதிப்பில்லாதது” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

திரைத்துறையில் தொடர்ந்து பிஸியாக இயங்கி வரும் ராஷ்மிகா, 400 குடும்பங்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு உதவ முன்வந்துள்ளதாகப் பகிர்ந்துள்ள தகவல் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. தனது முயற்சி மற்றவர்களையும் சமூகப் பணிகளில் ஈடுபடத் தூண்ட வேண்டும் என்ற அவரது விருப்பமும் இந்தப் பதிவின் மூலம் வெளிப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rashmika Mandanna adopts 400 families provides support for groceries for an entire year a truly heartwarming gesture


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->