“இனியும் வேடிக்கை பார்த்தால் அதிமுகவை காப்பாற்றுவது கடினம்” – சசிகலா அதிரடி பதிவு; அனைவரும் ஒன்றிணைய அழைப்பு!
If we continue to just watch it will be difficult to save the AIADMK Sasikala sharp statement calls for everyone to unite
அதிமுகவை காப்பாற்ற வேண்டுமென்றால் பிரிந்து சென்றவர்கள், கட்சியில் இருந்து விலக்கப்பட்டவர்கள், ஒதுங்கி நிற்பவர்கள் என அனைவரும் ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்துவிட்டதாக அஇபுதமமுக பொதுச்செயலாளர் சசிகலா தெரிவித்துள்ளார். இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் அதிமுகவை காப்பாற்றுவது மிகவும் கடினமாகிவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். அதிமுக தொடங்கப்பட்டு 54 ஆண்டுகள் நிறைவடைந்து 55-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் சசிகலா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் தவெகவின் வளர்ச்சி மற்றும் அதிமுகவின் தேர்தல் பின்னடைவுகள் குறித்து விவாதங்கள் நடைபெற்று வரும் சூழலில், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன. குறிப்பாக, சசிகலா மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் அதிமுக அணியில் இணைக்க வேண்டும் என்று சிலர் வலியுறுத்தி வருகின்றனர். இந்தச் சூழலில் சசிகலாவின் தற்போதைய பதிவு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
தனது பதிவில், “அதிமுக தோற்றுவிக்கப்பட்டு தற்போது 54 ஆண்டுகளை நிறைவு செய்து, 55-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனைக் கொண்டாடி மகிழும் கோடான கோடி தொண்டர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று சசிகலா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 1972-ஆம் ஆண்டு எம்ஜிஆரால் ஏழைகளுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம்தான் அதிமுக என்றும், தனது இறுதி மூச்சுவரை அந்த இயக்கத்தைக் காப்பாற்றியவர் எம்ஜிஆர் என்றும் தெரிவித்துள்ளார். அவரது மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா கட்சியை வழிநடத்தி, இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக உருவாக்கியதாகக் குறிப்பிட்டுள்ள சசிகலா, அந்த வளர்ச்சியில் தனக்கும் பங்கு இருப்பதை யாராலும் மறுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இரு தலைவர்களும் தான் அதிமுக இயக்கத்துடன் தொடர்ந்து பயணிக்கக் காரணமாக இருந்தவர்கள் என்று கூறியுள்ள அவர், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கட்சி பல்வேறு பின்னடைவுகளையும் தோல்விகளையும் சந்தித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். சிலரின் சுயநலமும், அவர்கள் எடுத்த தவறான முடிவுகளுமே இதற்குக் காரணமாக அமைந்துவிட்டதாகவும் அவர் தனது பதிவில் விமர்சித்துள்ளார்.
கட்சியின் மூலம் பலனடைந்த சிலர் தங்களது ஆதாயத்திற்காக இயக்கத்தை விட்டு விலகியிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ள சசிகலா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் வழியில் வந்த தொண்டர்கள் இன்றளவும் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் பயணித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். கட்சி எப்போது ஒன்றிணையும் என்பதே தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பிரிந்து சென்றவர்கள், விலக்கப்பட்டவர்கள், ஒதுங்கி நிற்பவர்கள் என அனைவரும் ஒன்றிணையும் காலம் எப்போது என்று தொண்டர்கள் ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள சசிகலா, அறிஞர் அண்ணாவின் “நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்” என்ற கருத்தை நினைவுகூர்ந்துள்ளார். கடந்த கால நிகழ்வுகளை மறந்து, தொண்டர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
“இதற்கு மேலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் இந்த இயக்கத்தைக் காப்பாற்றுவது மிகவும் கடினமாகிவிடும்” என்று எச்சரித்துள்ள சசிகலா, “இன்னும் நூற்றாண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும்” என்று ஜெயலலிதா தெரிவித்த நம்பிக்கை ஒருபோதும் வீண்போகக் கூடாது என்றும் கூறியுள்ளார்.
இறுதியாக, அதிமுக மீண்டும் ஒன்றுபட்ட, வலிமைமிக்க பேரியக்கமாக மலர வேண்டும் என்றும், தமிழகத்தில் மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைய வேண்டும் என்றும் சசிகலா தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். அந்த ஆட்சி தமிழக மக்களுக்கு மீண்டும் ஒரு பொற்காலமாக அமைய வேண்டும் என இறைவனை வேண்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சசிகலாவின் இந்தப் பதிவு, அதிமுகவில் நிலவும் பிரிவுகள் மற்றும் எதிர்கால ஒற்றுமை குறித்த விவாதங்களை மீண்டும் முன்னிலைக்குக் கொண்டு வந்துள்ளது.
English Summary
If we continue to just watch it will be difficult to save the AIADMK Sasikala sharp statement calls for everyone to unite