'ராம் யாத்ரா' நாட்டியாஞ்சலி அதிர்ச்சி அளிக்கிறது; அரசு விழாக்களில் மதச்சார்பின்மை காக்கப்பட வேண்டும்; எஸ்டிபிஐ வலியுறுத்தல்..! - Seithipunal
Seithipunal


அரசு விழாக்களில் மதச்சார்பின்மை காக்கப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயல் தலைவர் அச. உமர் பாரூக் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

''உலகச் சுற்றுலா தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் தனுஷ்கோடியில், தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில், பாஜக ஆளும் வடமாநிலங்களில் நடைபெறுவது போல 'ராம் யாத்ரா' என்ற பெயரில், குழந்தைகளுக்குக் காவி உடை அணிவித்து நாட்டியாஞ்சலி நடத்தப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கிறது.

பன்மைத்துவமும் சமூக நல்லிணக்கமும் ஆழமாக வேரூன்றிய தமிழக மண்ணில், இந்துத்துவ அடையாளங்களை முன்னிறுத்தி அரசு விழாவாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அரசு நிர்வாகமே நேரடியாக இத்தகைய நிகழ்வை முன்னெடுத்திருப்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மதச்சார்பின்மைக் கோட்பாட்டிற்கு முற்றிலும் எதிரானது. 

அனைத்து மதங்களையும் சமமாகப் பாவிப்பதும், அரசு நிர்வாகத்தை மத அடையாளங்களிலிருந்து விலக்கி வைப்பதுமே மக்களாட்சியின் அடிப்படை நெறி. சுற்றுலாத் துறை போன்ற பொது நிர்வாக அமைப்புகள், குறிப்பிட்ட அடையாளத்துடன் கூடிய மதச் சடங்குகளையோ, வழிபாட்டு வடிவங்களையோ அரசு விழாக்களாக மாற்றுவது பன்முகத்தன்மையைச் சிதைக்கும் செயலாகும்.

தமிழகத்தின் நீண்டகால அரசியல் மரபில் மதச்சார்பற்ற மாண்புகள் உறுதியாகப் பேணப்பட்டு வந்த சூழலில், தற்போதைய அரசு இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு இடம் கொடுத்திருப்பது ஜனநாயக சக்திகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஆகவே, தமிழ்நாடு அரசு மதச்சார்பற்ற கட்டமைப்பைப் பலவீனப்படுத்தாமல், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை விழுமியங்களை உணர்ந்து, எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் அரசு இயந்திரத்தின் மூலம் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.'' என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

SDPI insists that secularism must be upheld at government events


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->