சட்டவிரோதமாக அமெரிக்கா செல்ல முயன்ற குஜராத் குடும்பத்தினரை கடத்திய எத்தியோப்பியா கும்பல்; ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டல்..!
Ethiopian gang abducts Gujarat family attempting to enter the US illegally
அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாகச் செல்ல முயன்ற குஜராத்தைச் சேர்ந்த இளம்பெண் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 03 பேர் எத்தியோப்பியாவில் கடத்தப்பட்டு, ஒரு கோடி ரூபாய் கேட்டு பேரம் பேசப்படும் சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் மெக்சானா மாவட்டத்தைச் சேர்ந்த மம்தா சாவ்தா (30) என்பவரின் கணவர் கடந்த 03 ஆண்டுகளாக அமெரிக்காவில் மாணவர் விசாவில் வசித்து வருகிறார். அவருடன் இணைய மம்தா சாவ்தா எடுத்த விசா முயற்சிகள் 06 முறையாக நிராகரிக்கப்பட்டன.
இதனால் மனம் உடைந்த போன குடும்பத்தினர், எப்படியாவது அமெரிக்காவுக்கு செல்லவேண்டும் என திட்டமிட்டுள்ளனர். அதற்காக கள்ளத்தனமாக வெளிநாடுகளுக்கு ஆட்களைக் கடத்தும் ஏஜெண்டுகளின் வலையில் சிக்கியுள்ளனர்.
அதன்படி, அல்பேஷ் பஞ்சால் என்ற உள்ளூர் இடைத்தரகர் மூலம், வதோதராவைச் சேர்ந்த பார்கவ் படேல் என்ற முக்கிய கடத்தல் ஏஜெண்ட் அறிமுகமாகியுள்ளார். இவர் மம்தா சாவ்தா, அவரது உறவினர்களான ருத்விக் ஜன்சாரி (23) மற்றும் மயூரி சோலங்கி (27) ஆகிய 3 பேரையும் குறுக்குவழியில் அமெரிக்காவுக்கு அனுப்ப தலா 75 லட்சம் ரூபாய் பேசி, முன்பணமாக 70 லட்சம் ரூபாயைப் பெற்றுள்ளார். அதன்படி, கடந்த 20-ஆம் தேதி மூவரும் புறப்பட்டு அபுதாபி வழியாக ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவிற்கு சென்று அங்குள்ள ஜி.எஸ்.எப். முகாமில் தங்கியுள்ளனர்.
பின்னர் கடந்த 22-ஆம் தேதி தாங்கள் மூவரும் கனடாவுக்குப் பாதுகாப்பாக வந்துவிட்டதாக மம்தா பேசிய நிலையில்,செல்போன் அழைப்புக்குப் பிறகு மூவரின் தொடர்பும் துண்டிக்கப்பட்டு மாயமாகியுள்ளனர்.
இதையடுத்து 03 நாட்களுக்குப் பிறகு 'கான்' என்ற பெயரில் பேசிய மர்ம நபர் ஒருவன், குறித்த மூவரையும் நாங்கள் சிறைபிடித்து வைத்துள்ளதாகவும், உயிருடன் விடுவிக்க வேண்டுமென்றால் 1 கோடி ரூபாய் தரவேண்டும் என்று மிரட்டல் விடுத்துள்ளான்.
இதனால் நிலைகுலைந்த மம்தாவின் தந்தை கிரித்பாய் சவுகான், ஏற்கனவே பெரும் தொகையை இழந்து தவிக்கும் தங்கள் குடும்பத்தின் பிள்ளைகளைக் காப்பாற்ற மத்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என்று கண்ணீருடன் உதவி கேட்டுள்ளார்.
இதற்கிடையே, அவர்கள் கனடாவிற்குச் செல்லவே இல்லை என்றும், எத்தியோப்பியாவிலேயே கொடூரக் கடத்தல் கும்பலால் சிறைபிடிக்கப்பட்டதாகவும் ஏஜெண்ட் அல்பேஷ் பஞ்சால் தெரிவித்துள்ளார். மேலும் தனக்குத் தெரிந்த சர்வதேச ஏஜெண்ட் தலைமறைவாகி விட்டதாகவும், தான் ஏற்கனவே கொடுத்த 60 லட்சம் ரூபாய் போக கூடுதல் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் அந்த இடைத்தரகர் நாடகமாடி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த கடத்தல் மற்றும் பணமோசடி குறித்து லங்னாஜ் போலீசார் தீவிர வழக்குப் பதிவு செய்து, மோசடி ஏஜெண்டுகளை வளைத்துப் பிடிப்பதுடன், பணயக் கைதிகளாக சிக்கியுள்ள மூவரையும் பத்திரமாக மீட்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Ethiopian gang abducts Gujarat family attempting to enter the US illegally