அரசியல் முட்டு சந்தில் சசிகலா! ஆட்டத்தை ஆரம்பிப்பாரா இல்லையா? தனித்தனி ரூட் எடுத்த விசுவாசிகள்! காலியாகும் கூடாரம்! - Seithipunal
Seithipunal


ஒருகாலத்தில் எல்லையில்லா அதிகாரத்துடன் அரசியலில் வலம் வந்த சசிகலாவின் பயணம் தற்போது முட்டுச் சந்தில் நிற்கும் நிலையில் உள்ளது. சசிகலாவால் எம்எல்ஏக்களாகவும், அமைச்சர்களாகவும், முதலமைச்சராகவும் உயர்த்தப்பட்டவர்கள் இன்று தங்களுக்கென தனித்தனி அரசியல் பாதைகளை தேர்ந்தெடுத்துள்ளனர். இதன் விளைவாக, அரசியலில் கிட்டத்தட்ட தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் சசிகலா நிற்கிறார் என்ற விமர்சனம் வலுப்பெற்று வருகிறது.

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் போன்றோர் பாஜக ஆதரவை நம்பி தங்களது அரசியல் எதிர்காலத்தை திட்டமிட்டு வரும் சூழலில், சசிகலா அடுத்த கட்டமாக என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. குறிப்பாக 2026 சட்டமன்றத் தேர்தலையும் சசிகலா தவறவிட்டால், அவரது அரசியல் வாழ்க்கை பெரிய கேள்விக்குறியாக மாறிவிடும் என்ற அச்சம் அவரது ஆதரவாளர்களிடையே நிலவுகிறது.

பாஜக தரப்பில் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் குறித்து தொடர்ந்து பேசப்படும் நிலையில், ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமானவராக இருந்த சசிகலா குறித்து எந்த தேசிய தலைவரும் வெளிப்படையாக பேசாதது கவனிக்கத்தக்கதாக உள்ளது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தொடங்கி, டிடிவி தினகரன் தனது அரசியல் பாதையை தனிப்பட்ட முறையில் அமைத்துக் கொண்டுள்ள நிலையில், சசிகலா குறித்து அவர் கவலைப்படவில்லை என்பதே அரசியல் வட்டாரங்களின் மதிப்பீடு.

அதேபோல், ஒருகாலத்தில் சசிகலாவின் ஆதரவால் முதல்வர் பதவியை அடைந்த ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தற்போது சசிகலாவை குறித்து பேசாமல், தங்களுக்கான அரசியல் நிலைப்பாட்டை உறுதி செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர். இவர்களை உயரத்திற்கு கொண்டு வந்த சசிகலாதான் இன்று அரசியல் அனாதையாக நிற்கிறார் என்ற விமர்சனமும் எழுகிறது.

சசிகலாவின் ஆதரவாளர்கள் சிலர் கூறுகையில், அதிகாரத்தில் இருந்த காலத்தில் எந்தப் பயனும் பெறாதவர்கள்தான் இன்று சின்னம்மாவுக்கும் தினகரனுக்கும் விசுவாசமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் பலன் அடைந்தவர்கள்தான் தற்போது எதிராக நிற்கிறார்கள் என்றும் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக தினகரன் தனி வழியில் சென்றுவிட்டதாகவும், ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவில் இணைவதற்காக அமித் ஷாவை நம்பி முயற்சி செய்து வருவதாகவும், சசிகலா மட்டும் எந்த திசை என்று தெரியாமல் நிற்கிறார் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தாலும், யாருடன் பேசுகிறேன், என்ன பேசுகிறேன் என்பதை சசிகலா ரகசியமாகவே வைத்திருப்பது, அவரது அரசியல் நிலையை மேலும் குழப்பமாக்குகிறது என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இந்த தொடர்ச்சியான மௌன அரசியல், ஒருகாலத்தில் அவரை நம்பியிருந்தவர்களையே புதிய அரசியல் பாதைகளை தேட வைக்கிறது என்ற கருத்தும் நிலவுகிறது.

சசிகலாவின் அரசியல் தனிமையை வெளிப்படுத்தும் சம்பவமாக, அண்மையில் அவர் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்ற பயணம் எடுத்துக்காட்டப்படுகிறது. அந்தச் சமயத்தில் சசிகலாவுடன் அவரது தனிப்பட்ட உதவியாளர் மட்டுமே இருந்தார். வழக்கமாக உடன் இருக்கும் ஆதரவாளர்கள் யாரும் இல்லாததற்கு, “சின்னம்மாவே யாரும் வர வேண்டாம் என்று சொல்லிவிட்டார்” என்ற விளக்கம் கூறப்பட்டது. இதுவே, சசிகலா அரசியலில் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டாரா என்ற கேள்வியை மேலும் வலுப்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sasikala in a political dead end Will she start the game or not The loyalists who took separate roots The empty tent


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?


செய்திகள்



Seithipunal
--> -->