பீஹார் தேர்தலில் படுதோல்வியால் RJD க்கு விழுந்த மரண அடி; 2030 வரை ராஜ்யசபா எம்பிக்களையும் இழக்கும் அபாயம்..!
RJD will also lose Rajya Sabha MPs due to its crushing defeat in the Bihar elections
நடந்து முடிந்த பீஹார் சட்டசபை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் படுதோல்வி அடைந்துள்ளது. இதன்காரணமாக 2030-ஆம் ஆண்டு வரை அக்கட்சி ராஜ்ய சபாவுக்கு, எம்பிக்களை அனுப்ப முடியாத சூழல் உருவாகியுள்ளது. இது RJD கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்த படுதோல்வியை அடுத்து, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு உள்ளேயும், லாலுவின் குடும்பத்திற்கு உள்ளேயும் கடும் பூசல்கள் எழுந்துள்ளன. ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் லாலு குடும்ப உறுப்பினர்களின் மோதல்களில் பூதாரமாகியுள்ள நிலையில், தற்போது அரசியல் நெருக்கடிக்குள்ளும் சிக்கி சின்னா பின்னமாகியுள்ளது.
பீஹார் தேர்தலில் அதிக தொகுதிகளில் தோற்றதால், 2026-ஆம் ஆண்டு ராஜ்யசபா எம்பிக்களை பெற முடியாத நிலைக்கு ராஷ்டிரிய ஜனதா தளம் தள்ளப்பட்டுள்ளது. ஏனெனில், பீஹார் சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் 16 ராஜ்யசபா எம்பிக்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில் தற்போது ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு மனோஜ் ஜா, சஞ்சய் யாதவ், பையாஸ் அகமது, பிரேம்சந்த் குப்தா மற்றும் அம்ரேந்திரா தரிசிங் ஆகிய 05 எம்பிக்கள் உள்ளனர்.

இவர்களில் அமரேந்திரா தரிசிங் மற்றும் பிரேம்சந்த் குப்தா ஆகியோரின் எம்பி பதவிக்காலம் அடுத்தாண்டு முடிகிறது. பையாஸ் அகமது எம்பியின் பதவிக்காலம் 2028-இலும், எஞ்சியவர்களான மனோஜ் ஜா மற்றும் சஞ்சய் யாதவ் ஆகிய இருவரின் பதவிக்காலம் 2030-ஆம் ஆண்டு ஏப்ரலில் முடியவுள்ளது.
அதாவது, பீஹார் மாநிலத்திற்கு, அடுத்த சட்டசபை தேர்தல் 2030-ஆம் ஆண்டு தான் மீண்டும் நடைபெறும். ஒரு கட்சியின் சார்பில் ராஜ்யசபா எம்பிக்கு 42 எம்எல்ஏக்கள் ஆதரவளிக்க வேண்டும். அப்போது தான் எம்பியாக முடியும். ஆனால், 2025-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மகாகட்பந்தன் என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் கூட்டணியில் இருந்த ராஷ்டிரிய ஜனதா தளம் வெறும் 25 தொகுதிகளில் தான் வென்றுள்ளது. கூட்டணியில் மொத்தம் 35 எம்எல்ஏக்கள் தான் வெற்றி பெற்றுள்ளனர்.
இதில், ஒரு எம்பிக்கு 42 எம்எல்ஏக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்ற சூழலில், ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு ராஜ்ய சபா எம்பிக்கள் கிடைக்க மாட்டார்கள். ஏனேனில், அவர்களின் எம்எல்ஏக்கள் எண்ணிக்கையே 25 என்பதால் அவர்களால் ராஜ்ய சபா எம்பிக்கு வேட்பாளர்களை நிறுத்த முடியாது.

அத்துடன், எதிர்க்கட்சிகளின் ஒட்டு மொத்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கையையும் கணக்கில் எடுத்துக் கொண்டாலும் கூட, ராஜ்ய சபா எம்பி பதவிக்கு வேட்பாளரை நிறுத்த முடியாத ஒரு சோகமான சூழல் உருவாகியுள்ளது. இதன் மூலம் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் ராஜ்ய சபா எம்பிக்கள் எண்ணிக்கையும் உயராது.
மாறாக, பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ராஜ்ய சபா எம்பிக்களின் எண்ணிக்கை உயரும் சூழல் உருவாகியுள்ளது. இந்த பீஹார் சட்டசபை தேர்தல் தோல்வியானது, மாநிலத்தில் மட்டுமல்ல, மத்தியிலும் ராஷ்டிரிய ஜனதா தளம் மட்டும் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கும் பெரும் சரிவு மற்றும் சம்மட்டி அடியாக உள்ளது.
English Summary
RJD will also lose Rajya Sabha MPs due to its crushing defeat in the Bihar elections