ராகுல் – கனிமொழி சந்திப்பு: காங்கிரஸ்க்கு 36 தொகுதிகள்? காங்கிரஸ் டிமாண்ட் – திமுக தயக்கம்!டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Kanimozhi meeting 36 seats for Congress
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி இடையிலான முக்கிய சந்திப்பு டெல்லியில் நிறைவடைந்துள்ளது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை என்று விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழக அரசியல் களம் தற்போது பரபரப்பான கட்டத்தில் உள்ளது. அதிமுக தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து, தொகுதி பங்கீட்டும் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் இதுவரை தொகுதி பங்கீட்டுக்கான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை குழு கூட அமைக்கப்படவில்லை. இது கூட்டணிக் கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில்தான் காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்ரவர்த்தி, மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்ட சில தலைவர்கள், “ஆட்சியில் பங்கு” என்ற கருத்துகளை வெளிப்படையாக முன்வைத்தனர். இந்த பேச்சுகள் திமுக வட்டாரங்களில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து ஜனவரி 17-ஆம் தேதி டெல்லியில் காங்கிரஸ் எம்பிக்கள், எம்எல்ஏ-க்கள் அனைவரையும் அழைத்து, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, கே.சி. வேணுகோபால் ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனையின் முடிவில், கூட்டணி குறித்து இனி யாரும் பொதுவெளியில் பேசக்கூடாது என்று ராகுல் காந்தி நிர்வாகிகளுக்கு தெளிவான உத்தரவை பிறப்பித்தார்.
ஆனாலும், தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், “கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக திமுகவின் பதிலுக்காக இரண்டு மாதங்களாக காத்திருக்கிறோம். இன்னும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையே தொடங்கப்படவில்லை” என்று கூறியது, அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதன் மூலம் திமுக திட்டமிட்டு காலம் தாழ்த்துகிறது என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன.
இந்த பின்னணியில்தான், திமுக இன்று காங்கிரஸ் கட்சியுடன் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது. திமுக எம்பி கனிமொழி, டெல்லியில் ராகுல் காந்தியின் இல்லத்தில் அவரையும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் மூலம் முதல்வர் மு.க. ஸ்டாலின், கனிமொழி வழியாக ராகுல் காந்தியுடன் நேரடியாக பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சி தரப்பில் தொகுதி பங்கீடு குறித்து கடும் டிமாண்ட் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ், 36 சட்டமன்றத் தொகுதிகளுடன் கூடுதலாக 2 ராஜ்யசபா சீட்களை கோரியுள்ளதாக கூறப்படுகிறது. சில வட்டாரங்கள், காங்கிரஸ் 41 முதல் 45 தொகுதிகள் வரை கோருவதாகவும், பேச்சுவார்த்தையின் இறுதியில் 38 தொகுதிகளுக்கு சம்மதிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கின்றன.
இதற்கு மாறாக, திமுக தரப்பில் அதிகபட்சமாக 2021 தேர்தலில் ஒதுக்கிய 25 தொகுதிகளை விட 2 முதல் 5 தொகுதிகள் கூடுதலாக மட்டுமே வழங்கத் தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது 27 முதல் 30 தொகுதிகளுக்கு மேல் காங்கிரசுக்கு ஒதுக்க திமுக விருப்பமில்லை என்பதே தற்போதைய நிலை.
இந்த நிலையில், ராகுல் – கனிமொழி சந்திப்பு ஒரு தொடக்கமாக இருந்தாலும், தொகுதி பங்கீடு தொடர்பான இறுதி உடன்பாடு இன்னும் வெகுதூரத்தில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. வரும் நாட்களில் இந்த பேச்சுவார்த்தை எந்த திசையில் நகரும் என்பதே, திமுக – காங்கிரஸ் கூட்டணியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.
English Summary
Rahul Kanimozhi meeting 36 seats for Congress