காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி நாளை ஆலோசனை!திமுக அல்லது தவெக கூட்டணி? காங்கிரஸ் முடிவு தான் என்ன?
Rahul Gandhi to meet with Congress leaders tomorrow DMK or TDP alliance What is the Congress decision
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி எந்தக் கூட்டணியில் இடம்பிடிக்கும் என்பதில் அரசியல் வட்டாரங்களில் கடும் சஸ்பென்ஸ் நிலவி வருகிறது. திமுக கூட்டணியில் தொடருமா அல்லது நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) புதிய கூட்டணி அமைக்குமா என்ற கேள்வி தற்போது தீவிர விவாதமாக மாறியுள்ளது. இந்தச் சூழலில், தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அனைத்துக் கட்சிகளிலும் வேகமடைந்துள்ளன. ஒரு பக்கம் அதிமுக தனது கூட்டணியை விரிவுபடுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், மறுபக்கம் திமுக கூட்டணிக்குள் காங்கிரஸ் தொடர்பான விவகாரம் புதிய சலசலப்பை உருவாக்கியுள்ளது.
காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகலாம் என்ற பேச்சுக்கள் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளன. குறிப்பாக, விஜயின் தவெக கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு காங்கிரஸில் ஒரு தரப்பு தீவிரமாக ஆதரவு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. தவெக தலைவர் விஜய் “ஆட்சியில் பங்கு” என்ற வாக்குறுதியை முன்வைத்துள்ளதால், அந்த வாய்ப்பை பயன்படுத்தி மாநில அரசியலில் காங்கிரஸை வலுப்படுத்தலாம் என்ற எண்ணம் சில தலைவர்களிடம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக, திமுக மீது அதிருப்தியை வெளிப்படையாகச் சொல்லத் தொடங்கிய காங்கிரஸ் தலைவர்களும் உள்ளனர்.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில், மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் உள்ளிட்டோர் அடங்கிய ஐந்து பேர் குழு அமைக்கப்பட்டு, தேர்தல் தொடர்பாக திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது தொகுதி பங்கீடு குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் அந்த பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் இறுதியாகவில்லை.
திமுக தரப்பில் காங்கிரஸ் கூட்டணியில் தொடர வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும், “கூட்டாட்சி” அல்லது ஆட்சியில் நேரடி பங்கு வழங்குவது தொடர்பாக கட்சி தயக்கம் காட்டுகிறது. கடைசி நேரத்தில் கூடுதல் தொகுதிகளை ஒதுக்கி, கூட்டணி ஆட்சி கோரிக்கையை கைவிடுமாறு காங்கிரஸிடம் திமுக வலியுறுத்தலாம் என்றே அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.
திமுக – காங்கிரஸ் கூட்டணி கடந்த பல ஆண்டுகளாக தமிழக அரசியலில் வெற்றிகரமான கூட்டணியாக இருந்து வருகிறது. 2019 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற முக்கிய தேர்தல்களில் இந்த கூட்டணி தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில், தவெக கூட்டணி காங்கிரஸுக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கக்கூடும் என்ற கருத்தும் நிலவுகிறது. ஆனால் அது விஜயின் முதல் சட்டசபைத் தேர்தல் என்பதால், தேர்தல் பலன் எப்படியிருக்கும் என்பது குறித்து உறுதியான கணிப்பு இல்லை.
இந்த பின்னணியில்தான், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி நாளை டெல்லியில் ஆலோசனை நடத்த உள்ளார். இதற்காக மாநில தலைவர் செல்வப்பெருந்தகை டெல்லி செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆலோசனையில், திமுக கூட்டணியில் தொடர்வது சரியானதா, அல்லது தவெகவுடன் புதிய கூட்டணி அமைப்பதா, திமுக கூட்டணியில் தொடரும் பட்சத்தில் எத்தனை தொகுதிகள் கோரலாம் போன்ற முக்கிய அரசியல் முடிவுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆலோசனைக்குப் பிறகு காங்கிரஸ் எடுக்கும் முடிவு, தமிழக அரசியல் களத்தில் பெரிய திருப்பமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
English Summary
Rahul Gandhi to meet with Congress leaders tomorrow DMK or TDP alliance What is the Congress decision