ராகுல் காந்தி நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்துகிறார் - அமித்ஷா காட்டம்!
Rahul Gandhi threatens the countrys security Amitshah Kattam
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக மாணவர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடியதோடு தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
மத்திய அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள தனது எக்ஸ் தள பக்கத்தில், நாட்டை பிளவுபடுத்த சதி செய்யும் சக்திகளுடன் நிற்பதும், தேச விரோத கருத்துகளை வெளியிடுவதும் ராகுல் காந்திக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் வாடிக்கையாகிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், நாட்டு நலனுக்கு எதிரான ஜம்மு-காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சியை ஆதரிப்பது, வெளிநாட்டு மேடைகளில் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை பேசுவது என எப்போதும் ராகுல் காந்தி தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதமாகவும், இந்தியர்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும் செயல்படுவதாக சாடியுள்ளார்.
மதம், மொழி வேறுபாடுகளின் அடிப்படையில் பிளவுகளை ஏற்படுத்தும் காங்கிரசின் அரசியலை ராகுல் காந்தியின் பேச்சு அம்பலப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அமித்ஷா, இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பேசிய ராகுல் காந்தி, காங்கிரசின் இடஒதுக்கீட்டுக்கு எதிரான முகத்தை மீண்டும் ஒருமுறை முன்னிலைப்படுத்தியுள்ளார்.
ராகுல் காந்தியின் மனதில் இருந்த எண்ணங்கள் வார்த்தைகளாக வெளியேறிவிட்டதாக கூறியுள்ள அவர், பாஜக இருக்கும் வரை யாராலும் இடஒதுக்கீட்டை ரத்து செய்யவோ, தேசத்தின் பாதுகாப்பில் குழப்பம் ஏற்படுத்தவோ முடியாது என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Rahul Gandhi threatens the countrys security Amitshah Kattam