'ராகுல் காந்தி பதவிக்காக அரசியல் செய்பவர் அல்ல'...! - முரசொலிக்கு எதிராக கொதித்தெழுந்த மாணிக்கம் தாகூர்...!
Rahul Gandhi not politician who does politics office Manickam Thakur furious against Murasoli
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,"முரசொலியில் வெளியான கட்டுரையை வாசித்த பின்னர் இயல்பாக எழும் கேள்வி ஒன்றுதான்.
2026 சட்டசபைத் தேர்தலில் 131 இடங்களை கைப்பற்றியிருந்த திமுக, மக்கள் தீர்ப்பால் 59 இடங்களாக சுருங்கியதற்கான காரணங்களை அதன் தலைமை உண்மையாக ஆய்வு செய்ததா? மக்கள் ஏன் திமுகவுக்கு எதிராக வாக்களித்தார்கள் என்பதை ஆராய்வதற்குப் பதிலாக, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியையும் காங்கிரஸ் கட்சியையும் குறிவைத்து விமர்சிப்பது தோல்வியை மறைப்பதற்கான அரசியல் தந்திரமாகவே பார்க்கப்படுகிறது.
திமுக தனது அரசியல் பயணத்தில் பல ஏற்றத் தாழ்வுகளையும் தேர்தல் பின்னடைவுகளையும் சந்தித்துள்ளது. ஆனால் அந்தக் காலகட்டங்களில் கலைஞர் கருணாநிதி போன்ற அனுபவமிக்க தலைவர் இருந்தார்.

தோல்விகளை அரசியல் பக்குவத்துடனும் தொலைநோக்கு பார்வையுடனும் அணுகி, காரணங்களை பகுப்பாய்வு செய்து மீண்டும் எழுச்சி கண்டார். ஆனால் தற்போதைய உதயநிதி தலைமையிலான திமுக, ஒரு தேர்தல் பின்னடைவை கூட ஜனநாயக நாகரிகத்துடன் எதிர்கொள்ள இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக கூட்டணியில் இடம்பெற்ற தோழமைக் கட்சிகள் மீதும், குறிப்பாக காங்கிரஸ் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. இதனைப் பார்க்கும்போது, பாஜகவிடம் தங்களது காங்கிரஸ் எதிர்ப்பு மனநிலையை வெளிப்படுத்தி, அவர்களுடன் நெருக்கம் ஏற்படுத்திக்கொள்ளும் அரசியல் முயற்சியாகவே தோன்றுகிறது.தமிழக மக்கள் திமுக ஆட்சியின் ஊழல் குற்றச்சாட்டுகள், 36 சதவீத கமிஷன் அரசியல், குடும்ப ஆதிக்கம், நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் அதிகார அகந்தைக்கு எதிராகவே தங்களது தீர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
‘திராவிட மாடல்’ என்ற பெயரில் முன்னிறுத்தப்பட்ட ஆட்சி, வளர்ச்சியின் மாதிரியாக அல்லாமல் ‘கமிஷன் மாடல்’ அரசியலாக மாறிவிட்டது என்ற எண்ணம் மக்களிடையே வலுப்பெற்றிருந்தது.குறிப்பாக உதயநிதி ஸ்டாலினின் அரசியல் செயல்பாடுகளில் வெளிப்பட்ட அனுபவக் குறைபாடு, நிர்வாக முதிர்ச்சியின்மை மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய இயலாத சூழல் ஆகியவை திமுகவின் பின்னடைவுக்கு முக்கிய காரணிகளாக அமைந்தன.
அதற்கான அரசியல் பதிலடியையே மக்கள் தேர்தல் முடிவுகளின் மூலம் வழங்கியுள்ளனர்.இந்நிலையில் தமிழக அரசியல் களத்தில் மக்கள் எழுப்பும் முக்கியமான கேள்வி வேறொன்றாகும்.
மே 4-ந்தேதி மாலை வரை பாஜகவை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டிருந்த திமுக, மறுபுறம் பாஜக மற்றும் அதிமுகவுடன் மேற்கொண்டதாக கூறப்படும் மறைமுக அரசியல் பேச்சுவார்த்தைகள் என்ன? மக்கள் அளித்த தீர்ப்பின் தாக்கத்தை குறைக்கவும், அரசியல் மாற்றத்தின் வேகத்தை தடுக்கவும் நடைபெற்றதாக கூறப்படும் ரகசிய நகர்வுகள் என்ன என்பதற்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இப்போது ராகுல் காந்தி குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் ராகுல் காந்தி அதிகாரத்திற்காக அரசியல் நடத்தும் தலைவர் அல்ல. பதவிக்காக கொள்கைகளை விட்டுக்கொடுக்கும் அரசியல்வாதியும் அல்ல. நாட்டில் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம், அதானி ஆதிக்கம் மற்றும் ஜனநாயக நிறுவனங்களின் மீதான அழுத்தங்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தேசிய தலைவர் அவர்.எனது அன்புத் தலைவர் ராகுல் காந்தியின் அரசியல் நேர்மை, தியாக உணர்வு மற்றும் அறிவாற்றல் குறித்து கருத்து தெரிவிப்பதற்கு முன்பு அதற்கான அரசியல் தகுதியும் ஒழுக்கநெறியும் இருக்க வேண்டும்.
தினந்தோறும் நிலைப்பாடுகளை மாற்றிக்கொண்டு, வெளியில் ஒரு கருத்தையும் உள்ளுக்குள் வேறு அரசியல் கணக்குகளையும் வைத்திருப்பவர்களுக்கு அவரது அரசியல் ஆளுமையை விமர்சிக்கும் தார்மீக உரிமை இல்லை.மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்று சுயபரிசோதனையில் ஈடுபடுவதற்குப் பதிலாக, தொடர்ந்து பிறர்மீது பழி சுமத்தும் அரசியலை திமுக மேற்கொண்டால் அதன் அரசியல் சரிவு மேலும் தீவிரமடையும். மக்கள் ஏற்கனவே மிகத் தெளிவான செய்தியை வழங்கியுள்ளனர்.
ஊழல், கமிஷன் அரசியல், இரட்டை நிலைப்பாடு மற்றும் அதிகார அகந்தைக்கு தமிழக அரசியலில் இனி இடமில்லை என்பதே அந்தத் தீர்ப்பின் மையக் கருத்தாகும்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Rahul Gandhi not politician who does politics office Manickam Thakur furious against Murasoli