“ரகுபதிக்கு அருகதையே இல்லை”: எடப்பாடி மீது பாயும் திமுக அமைச்சரை கடுமையாக எச்சரித்த ஜெயக்குமார்!
Ragupathi has no mercy Jayakumar sternly warns DMK minister who is in a tizzy over Edappadi
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக அமைச்சர் ரகுபதியை குறிவைத்து வெளியிட்ட கடும் அறிக்கை தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வளர்த்தெடுத்தவர் ரகுபதி, இன்று அவரையே மறந்துவிட்டு அறிவாலயத்தின் “கோபாலபுர கொத்தடிமைகளில்” ஒருவராக நடந்து கொள்கிறார் என ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சேலத்தில் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியை அடுத்து எழுந்த சர்ச்சையில், முதல்வர் ஸ்டாலின் நேரடி பதிலளிக்காமல் தவிர்த்து வருவதாகவும், நெல்லின் ஈரப்பதம் உயர்த்துவதற்கான அனுமதி பெற திமுக அரசு எதையும் செய்யவில்லை என்பதையும் ஜெயக்குமார் சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து, “விவசாயிகளிடம் சென்று உண்மையைச் சொல்ல ரகுபதி தயாரா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மழை காரணமாக நெற்பயிரில் ஏற்பட்ட சேதத்துக்கான நிவாரணம் பற்றியும், கொள்முதல் நிலையங்களில் நடக்கும் முறைகேடுகளையும் எடப்பாடி சுட்டிக்காட்டியதை குறிப்பிடும் ஜெயக்குமார், ரகுபதியிடம் “இவன் முதுகில் குத்துபவன், எப்போதும் தன் எஜமானரையே கடித்துத் துரோகம் செய்வான்” என கடுமையாக தாக்கினார்.
அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடன் தள்ளுபடி, வறட்சி–வெள்ள நிவாரணம் போன்ற சாதனைகளை நினைவூட்டிய அவர், திமுக ஆட்சியில் விவசாயி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதே ‘சாதனை’ என பரிகசித்தார்.
மேகேதாட்டு அணை பிரச்சனையில் ஸ்டாலின் மௌனம் காக்கிறார் என்பதையும், விளம்பரத்திற்காக மட்டும் நடவடிக்கை எடுப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
இறுதியாக, ரகுபதிக்கு எச்சரிக்கை விடுத்த ஜெயக்குமார்,“அதிமுக அல்லது அதன் பொதுச் செயலாளர் குறித்து பேச நீங்கள் அருகதையில்லை. உங்கள் பதவி தேவைக்காக ஸ்டாலினை பாராட்டுங்கள்; எங்களை இழுத்துப் பேசியதற்கு மக்களே உங்களை நகைக்கிறார்கள்” என கடுமையாகச் சொன்னார்.
ஜெயக்குமாரின் இந்த அறிக்கை திமுக–அதிமுக இடையேயான அரசியல் சூட்டை மேலும் அதிகரித்துள்ளது.
English Summary
Ragupathi has no mercy Jayakumar sternly warns DMK minister who is in a tizzy over Edappadi