அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் +விசாகன்? அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு!
Raghava Lawrence and Visakan to join Annamalai We the Leaders movement A buzz in political circles
சென்னை: நடிகர், இயக்குநர் மற்றும் சமூக சேவகராக அறியப்படும் ராகவா லாரன்ஸ் அரசியலில் களமிறங்க உள்ளாரா என்ற கேள்வி மீண்டும் அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, முன்னாள் தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை தொடங்கியுள்ள ‘வி தி லீடர்ஸ்’ (We The Leaders) இயக்கத்தில் அவர் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருப்பது புதிய அரசியல் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள ராகவா லாரன்ஸ், மாற்றுத்திறனாளிகள், ஏழை மாணவர்கள் மற்றும் சமூகத்தின் பின்தங்கிய மக்களுக்காக தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருவதால், பொதுமக்கள் மத்தியில் தனித்துவமான வரவேற்பைப் பெற்றுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான லாரன்ஸ், கடந்த காலங்களில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பின் போது அவருடன் இணைந்து அரசியல் பயணத்தில் ஈடுபடுவார் என்ற பேச்சுகள் பரவலாக பேசப்பட்டன. ஆனால் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கும் திட்டத்தில் இருந்து விலகியதால், லாரன்ஸின் அரசியல் வருகையும் தள்ளிப்போனது.
சமீபத்தில் தனது அரசியல் சிந்தனைகள் குறித்து பேசிய ராகவா லாரன்ஸ், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்தபோது மகிழ்ச்சியடைந்ததாகவும், பின்னர் அவர் அந்த முடிவிலிருந்து விலகியபோது ஏமாற்றமடைந்ததாகவும் தெரிவித்திருந்தார். மேலும், நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது மற்றும் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் தன்னுள் புதிய சிந்தனையை உருவாக்கியதாகவும் அவர் கூறியிருந்தார்.
அதோடு, "நான் அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என்பதை ரசிகர்களே சொல்ல வேண்டும். எனக்கு ரசிகர்கள் தாய்க்கு நிகரானவர்கள்" என்று கூறியிருந்தார். இதனால் அவரது அரசியல் முடிவு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் இணையலாம் என்ற பேச்சு அரசியல் வட்டாரங்களில் வலுத்துள்ளது. ஏற்கனவே அண்ணாமலையின் புதிய அரசியல் முயற்சிகளுக்கு ரஜினி ரசிகர்கள் வட்டாரத்தில் ஒரு அளவிற்கு வரவேற்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், ரஜினியின் தீவிர ரசிகரான லாரன்ஸ் அண்ணாமலையை நோக்கி நகர்வது முக்கியத்துவம் பெறுகிறது.
மேலும், ரஜினிகாந்தின் மருமகன் விசாகன், முன்னாள் காவல் துறை அதிகாரி ஏ.கே. விஸ்வநாதன் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் அண்ணாமலையின் இயக்கத்தில் இணைய ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், ராகவா லாரன்ஸ் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்து இதுவரை நடிகர் தரப்பிலோ அல்லது அண்ணாமலை தரப்பிலோ எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால், இந்த தகவல்கள் தற்போது அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் தகவல்களாகவே பார்க்கப்படுகின்றன.
அதேநேரத்தில், ராகவா லாரன்ஸ் அரசியல் வருகை மற்றும் அவர் எந்த அரசியல் பாதையைத் தேர்வு செய்கிறார் என்பது தமிழக அரசியலில் புதிய கவனத்தை ஈர்க்கும் விஷயமாக மாறியுள்ளது.
English Summary
Raghava Lawrence and Visakan to join Annamalai We the Leaders movement A buzz in political circles