ராகுலுக்குப் போன மெசேஜ்! லம்பாக அமவுண்டை அமுக்கிய தலைகள்? ஆக்ஷனுக்கு தயாராகும் டெல்லி காங்கிரஸ்!
Message sent to Rahul Key figures pocketed a massive sum Delhi Congress gears up for action
சென்னை: 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மோசமான தோல்வியைச் சந்தித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில், தோல்விக்கான காரணங்கள் தொடர்பாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. தேர்தல் நிதி முறையாக செலவிடப்படவில்லை, கட்சி நிர்வாகிகள் புறக்கணிக்கப்பட்டனர், வேட்பாளர்கள் தனித்துப் பிரச்சாரம் செய்யும் நிலை ஏற்பட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள், காங்கிரஸ் மேலிடம் அமைத்துள்ள உண்மை கண்டறியும் குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக கூட்டணியில் இணைந்து 28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், வெறும் 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த பின்னடைவு கட்சிக்குள் கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், தோல்விக்கான காரணங்களை கண்டறிய டெல்லி காங்கிரஸ் மேலிடம் ஐவர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை அமைத்தது.
முன்னாள் எம்.பி. ஜெயகுமார், மாநில நிர்வாகிகள் சொர்ணா சேதுராமன், எஸ்.எம். இதயதுல்லா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ள இந்தக் குழு, முதலில் 234 தொகுதிகளிலும் ஆய்வு நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால் நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு, தோல்வியடைந்த 23 தொகுதிகளில் மட்டும் நேரடி விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, வேளச்சேரி, சோளிங்கர், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, பென்னாகரம் உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் குழுவினர் கட்சி நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் மற்றும் தேர்தல் பணியாற்றியவர்களிடம் நேரடியாக கருத்துகளை கேட்டறிந்துள்ளனர். இதுவரை ஆறு தொகுதிகளில் விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள தொகுதிகளிலும் ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த விசாரணையின் போது, தேர்தலுக்காக மேலிடம் வழங்கிய நிதியின் ஒரு பகுதி மட்டுமே களத்தில் பயன்படுத்தப்பட்டதாகவும், மீதமுள்ள தொகை முறையாக செலவிடப்படவில்லை என்றும் சில நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், தேர்தல் பிரச்சாரத்தின் போது மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், தொகுதி நிர்வாகிகள் மற்றும் அடிமட்டத் தொண்டர்களை வேட்பாளர்கள் முழுமையாக பயன்படுத்தவில்லை என்றும், காங்கிரஸ் நிர்வாகிகளை புறக்கணித்து திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளை மட்டுமே நம்பி தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் புகார்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சில தொகுதிகளில் வேட்பாளர்களுக்கும் மாவட்ட நிர்வாகிகளுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் தேர்தல் பணிகளை நேரடியாக பாதித்ததாகவும், கட்சித் தொண்டர்கள் முழுமையான ஈடுபாட்டைக் காட்டாததற்கும் இதுவே காரணம் எனவும் கூறப்படுகிறது.
கட்சியின் அடிப்படை அமைப்புகளை வலுப்படுத்தாமல், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை மட்டுமே நம்பியதே தோல்விக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக நிர்வாகிகள் சுட்டிக்காட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீதமுள்ள 17 தொகுதிகளிலும் விசாரணையை முடித்த பின்னர் விரிவான அறிக்கையை டெல்லி காங்கிரஸ் மேலிடத்திடம் உண்மை கண்டறியும் குழு சமர்ப்பிக்க உள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழக காங்கிரஸில் நிர்வாக மாற்றங்கள், ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் அமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
எனினும், தேர்தல் நிதி முறைகேடு மற்றும் பிற குற்றச்சாட்டுகள் தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ முடிவையும் அறிவிக்கவில்லை. இருப்பினும், தேர்தல் தோல்விக்கான காரணங்களை கண்டறிந்து கட்சியை மறுசீரமைக்க ராகுல் காந்தி தீவிர கவனம் செலுத்தி வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
Message sent to Rahul Key figures pocketed a massive sum Delhi Congress gears up for action