திமுக ஆட்சிக் கால டெண்டர் முறைகேடுகள் குறித்து ரகசிய ஆய்வு? அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்!
A secret probe into tender irregularities during the DMK regime Vijay is shaking the very foundations Arivalayam is set to be rattled
சென்னை: திமுக ஆட்சிக் காலத்தில் பல்வேறு துறைகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் டெண்டர் முறைகேடுகள் தொடர்பாக தமிழக அரசு ரகசிய ஆய்வுக் குழுக்களை அமைத்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல், அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தமிழகத்தில் நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, தொழில்துறை, ஊரக வளர்ச்சித் துறை, நீர்வளத் துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, மின்சாரத் துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறை உள்ளிட்ட பல முக்கிய துறைகளுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இந்தத் திட்டங்களில் பெரும்பாலானவை டெண்டர் முறையின் மூலம் தனியார் ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன. சாலை, பாலம், குடிநீர் திட்டங்கள், பள்ளி மற்றும் மருத்துவமனை கட்டிடங்கள் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு பணிகள் இதன் மூலம் நிறைவேற்றப்படுகின்றன.
இந்நிலையில், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சில துறைகளில் டெண்டர் ஒதுக்கீடுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே பணிகள் வழங்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், சில திட்டங்களில் கமிஷன் பரிவர்த்தனைகள் நடைபெற்றதாகவும் அரசுத் தரப்பில் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளதாகக் கூறப்படும் முதல்வர் விஜய், அரசுப் பணிகளில் முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்றும், டெண்டர் ஒதுக்கீடுகளில் அரசியல் தலையீடுகள் இருக்கக் கூடாது என்றும் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் தொடர்ச்சியாக, பல்வேறு துறைகளில் பணியாற்றும் நேர்மையான அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை கொண்டு சிறப்பு ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் குழுக்கள், கடந்த ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட டெண்டர்கள், ஒப்பந்தங்கள், பணிகள் நிறைவேற்றப்பட்ட விதம் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான விவரங்களை ஆய்வு செய்து வருகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, பெரிய அளவிலான கட்டுமானப் பணிகள், உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. துறை வாரியாக சேகரிக்கப்படும் தகவல்கள் சம்பந்தப்பட்ட துறைகளின் செயலர்கள் மூலம் தொகுக்கப்பட்டு அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கும், கடந்த ஆட்சியில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விவாதங்களுக்கும் பதிலளிக்கும் வகையில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரத்தில், இந்த நடவடிக்கையை திமுக தரப்பு அரசியல் பழிவாங்கலாக விமர்சிக்கக்கூடும் என்ற கருத்தும் நிலவுகிறது. ஆய்வுக் குழுக்கள் சமர்ப்பிக்கும் அறிக்கைகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமா அல்லது இது நிர்வாக ரீதியான மதிப்பீடாக மட்டுமே அமையுமா என்பது தற்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், இந்த ரகசிய ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்ற தகவல் தொடர்பாக தமிழக அரசு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
A secret probe into tender irregularities during the DMK regime Vijay is shaking the very foundations Arivalayam is set to be rattled