போலி மருந்து ஆலை சர்ச்சை: சிபிஐ விசாரணை கோரும் நாராயணசாமி! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை விவகாரம் தொடர்பாக ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் சார்பில் நேரு வீதியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும், சதிக்கு உதவிய அரசியல்வாதிகளைக் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, இந்தப் போலி மருந்து விவகாரத்தில் ஈடுபட்ட முக்கிய நபரான 'ராஜா', சபாநாயகருக்கு நெருக்கமானவர் என்று குற்றம் சாட்டினார். மேலும், இது பாஜக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய பரிவர்த்தனைகள் நடந்திருப்பதாகவும், ராஜா வீட்டில் கண்டெடுக்கப்பட்ட நாட்குறிப்பில் அரசியல்வாதிகள் பணம் பெற்ற தகவல்கள் இருப்பதாகவும், அவர் 22 கார்களை அரசியல்வாதிகளுக்கு வழங்கியதாகவும் தெரிவித்தார்.

நாராயணசாமி இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரியதோடு, மருந்தகங்களில் சோதனை நடத்தி போலி மருந்துகளைக் களைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், தாம் ஆட்சியில் இருந்தபோது தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கியதாகக் கூறியதற்குப் பதிலளித்த நாராயணசாமி, "நான் எந்த விசாரணைக்கும் தயார். இதில் எனக்குப் பங்கு இருந்தால் அரசியலை விட்டே விலகுகிறேன். என் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யட்டும்" என்று சவால் விடுத்தார். மேலும், நமச்சிவாயம் அன்றைய ஆட்சியில் இரண்டாவது அமைச்சராகவும், மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருந்த நிலையில், அப்போதே இதை எதிர்த்து ஏன் விலகவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

போலி மருந்து தொழிற்சாலையானது 2021-ல் சபாநாயகர் தொகுதியில், சபாநாயகர் மற்றும் ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் ஆசியோடு இயங்கியுள்ளது என்றும், ₹2,000 கோடிக்கு மாத்திரைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். எனவே, முதலமைச்சர், சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் நாராயணசாமி வலியுறுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

puducherry Narayanasamy congress CBI


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->