தேர்தல் சூடு...! பிரதமர் மோடி 11-ஆம் தேதி புதுச்சேரி வருகை! - பல நலத்திட்டங்களை தொடங்க உள்ளார்
Prime Minister Modi visit Puducherry 11th He launch several welfare schemes
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க. கூட்டணி அரசு தற்போது ஆட்சி நடத்தி வருகிறது. முதலமைச்சராக ரங்கசாமி பொறுப்பில் உள்ள நிலையில், விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்துள்ளது. மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் அரசியல் நகர்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதற்காக மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து புதுச்சேரி வருகை தந்து, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைகள் நடத்தி, முதலமைச்சர் ரங்கசாமியையும் சந்தித்து தேர்தல் திட்டங்களை வகுத்து வருகின்றனர்.
தேர்தலை முன்னிட்டு மக்களை கவரும் பல்வேறு நலத்திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.750 மதிப்பிலான பொங்கல் பரிசுத் தொகுப்புடன் தலா ரூ.3,000 பண உதவி வழங்கப்பட்டது.
அதேபோல் குடும்ப தலைவிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.1,000-ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டது. முதியோருக்கான உதவித்தொகையும் ரூ.500 அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு துறைகளில் காலியாக இருந்த பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கைகளும் வேகமடைந்துள்ளன.
இதனிடையே, தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக பிரதமர் மோடி புதுச்சேரி வந்து பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க வேண்டும் என முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் பா.ஜ.க. மாநில தலைவர் வி.பி. ராமலிங்கம் தொடர்ந்து கோரிக்கை வைத்திருந்தனர்.
அந்த கோரிக்கையை ஏற்று பிரதமர் வருகை தருவதாக உறுதி அளித்த நிலையில், வரும் 11-ம் தேதி (புதன்கிழமை) புதுச்சேரி வருகிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தனது பயணத்தின் போது மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை அவர் தொடங்கி வைக்க உள்ளார்.
English Summary
Prime Minister Modi visit Puducherry 11th He launch several welfare schemes