விஜயை முன்னிறுத்தி அரசியல் நாடகம்...! பா.ஜ.க -வுக்கு சபாநாயகர் அப்பாவு கடும் சாடல்
political drama using Vijay pawn Speaker Appavu launches scathing attack BJP
நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் மாணவ–மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, மாணவர்களுக்கு லேப்டாப்களை வழங்கி உரையாற்றினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து கருத்துத் தெரிவித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது,"மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் அவருடன் பயணித்தவர்களுடன் ஏற்பட்ட விமான விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தலைவர் என்ற முறையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், மகாராஷ்டிர மாநில மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழக முதலமைச்சர் மாணவர்களின் கல்வி வளர்ச்சியை கருத்தில் கொண்டு 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் மகத்தான திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, நெல்லை மாவட்டத்தில் முதற்கட்டமாக 9,703 மாணவ–மாணவிகளுக்கு லேப்டாப்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 5,469 தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதில் இன்று மட்டும் 2,480 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் இந்த லேப்டாப்களை பயன்படுத்தி உலகளாவிய தகவல்களை அறிந்து, தங்களுக்கான வேலைவாய்ப்புகளை தேடிக்கொள்ள வேண்டும். ஆடல், பாடல், நடிப்பு போன்றவை நீர்க்குமிழி போன்றவை. அவற்றை பொழுதுபோக்காக மட்டும் பார்க்க வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
சட்டமன்றத்திற்கு ஆளுநர் வந்ததும், சென்றதும் அனைத்தும் முறையான மரியாதையுடன் நடைபெற்றது. ஆனால் அவர் அச்சிடப்பட்ட உரையை முழுமையாக வாசிக்கவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, ஆளுநருக்கு வழங்க வேண்டிய மரியாதையை முதலமைச்சர் முழுமையாக வழங்கினார்.
ஆளுநர் உரை, அவர் ஒப்புதல் அளித்த பிறகே அச்சிடப்பட்டது. அந்த உரையை வாசிப்பதற்கே அவருக்கு அதிகாரம் உள்ளது. தனிப்பட்ட கருத்துக்களை பேசவோ, சில பகுதிகளைத் தவிர்க்கவோ அவருக்கு அதிகாரம் இல்லை. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் முழுமையாக ஜனநாயக முறையில்தான் நடந்து கொண்டார்.
மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. தளபதி, கூட்டணி கட்சிகள் குறித்து பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பினீர்கள். இந்த விஷயத்தில் கட்சி தலைவர் ஏற்கனவே கண்டனம் தெரிவித்துவிட்டார். கூட்டணி தொடர்பான விஷயங்களை தலைமை மட்டுமே பேச வேண்டும்.
கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் இதுபோன்ற கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், தமிழக வெற்றிக்கழகமும் பா.ஜ.க.வும் இணைந்து அரசியல் நாடகம் நடத்தி வருகின்றன. கொள்கை ரீதியாக ஒன்றிணைந்து, தி.மு.க.விற்கு எதிராக சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பிரிப்பதே இவர்களின் நோக்கம்.
நடிகர் விஜய், சினிமாவில் நடிப்பதை விட்டு அரசியலுக்கு வந்து, தற்போது பா.ஜ.க.வுடன் சேர்ந்து நடித்து வருகிறார்.வேறு கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஓவைசி எவ்வாறு பா.ஜ.க. ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துக்கொள்கிறாரோ, அதேபோல தமிழகத்தில் விஜயை முன்னிறுத்தி அரசியல் செய்ய பா.ஜ.க. முயற்சி செய்கிறது.
ஆனால் சிறுபான்மை மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். பா.ஜ.க. ஆதரவு சக்திகளுக்கு அவர்கள் ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள்” என்று அவர் தெரிவித்தார்.
English Summary
political drama using Vijay pawn Speaker Appavu launches scathing attack BJP