அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை! CM ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுக்கும் டாக்டர் இராமதாஸ்!
PMK Ramadoss Condemn to DMK Govt MK Stalin Urimai Thokai
மகளிர் உரிமைத் தொகை பெற புதிய பயனாளிகள் சேர்க்கப்படும் நிலையில், கூடுதலாக ஒதுக்கியது ரூ. 7 கோடி மட்டுமே: அதைக் கொண்டு எத்தனைப் பேருக்கு தமிழக அரசு உரிமைத் தொகை வழங்கும்? என்று பாமக நிறுவனர் தலைவர் மருத்துவர் இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், "தமிழக அரசால் செயல்படுத்தப்படும் மாதம் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளிகளைச் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் வரும் ஜூன் 4-ஆம் நாள் முதல் பெறப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்தத் திட்டத்திற்காக கூடுதல் நிதியே ஒதுக்காமல் புதிய பயனாளிகள் சேர்க்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்திருப்பதை மக்களை ஏமாற்றும் செயலாகவே பார்க்க வேண்டியுள்ளது.
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, இன்றைய நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்படி பயனடையும் குடும்பத் தலைவிகளின் எண்ணிக்கை 1.15 கோடி ஆகும். அவர்களுக்கு மாதம் ரூ.1000 வீதம் நிதி வழங்க வேண்டுமானால், அதற்கு ரூ.13,800 கோடி தேவை. ஆனால், 2025-26ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் இந்தத் திட்டத்திற்காக ரூ.13,807 கோடி மட்டும் தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தேவையை விட வெறும் ரூ.7 கோடி மட்டும் தான் அதிகம் ஆகும்.
மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின்படி ஒருவருக்கு மாதம் ரூ.1000 வீதம் ஆண்டுக்கு ரூ.12,000 வழங்க வேண்டும். தமிழக அரசு கூடுதலாக ஒதுக்கியுள்ள ரூ.7 கோடியைக் கொண்டு 5,833 பேருக்கு மட்டும் தான் கூடுதலாக உரிமைத் தொகை வழங்க முடியும். ஆனால், ஜூன் 4-ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் 9 ஆயிரம் மையங்களில் இதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. ஒவ்வொரு மையத்திலும் சராசரியாக 100 தகுதியான விண்ணப்பங்கள் பெறப்படுவதாக வைத்துக் கொண்டாலும் 9 லட்சம் பேருக்கு கூடுதலாக உரிமைத் தொகை வழங்க வேண்டும். ஆனால், அரசு ஒதுக்கியுள்ள நிதியைக் கொண்டு 9 ஆயிரம் பேருக்குக் கூட உரிமைத் தொகை வழங்க முடியாது எனும் போது தமிழக அரசு ஏன் இதற்காக பிரமாண்ட அறிவிப்பை வெளியிட வேண்டும்?
2021-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் திமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தலா ரூ.1000 வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், தகுதியுடையவர்களுக்கு மட்டும் தான் உரிமைத் தொகை என்று நிலையை மாற்றிக் கொண்ட தமிழக அரசு, அதன்படி தகுதியுள்ளவர்களிடமிருந்து ஒரு கோடியே 63 லட்சத்து 57 ஆயிரத்து 195 விண்ணப்பங்கள் பெறப்பட்டன, அதில் 1 கோடியே 6 லட்சத்து 52 ஆயிரத்து 198 பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. மீதமுள்ள 56 லட்சம் விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதன் பின் தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்களை அளித்தவர்கள் மேல்முறையீடு செய்தனர். அவர்களிலும் 9 லட்சம் பேரின் மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டன.
மகளிர் உரிமைத் தொகை தொடர்பான ஒவ்வொரு அறிவிப்பின் போதும் தமிழ்நாட்டு மக்கள் நம்பி ஏமாறுவது வாடிக்கையாகி விட்டது. இன்னொருமுறை தமிழ்நாட்டு மக்களை அரசு ஏமாற்றக் கூடாது. புதிதாக பெறப்படும் விண்ணப்பங்களின் அடிப்படையில் எவ்வளவு பேருக்கு மகளிர் உரிமைத் தொகை புதிதாக வழங்கப்படவுள்ளது? ரூ.7 கோடி மட்டுமே கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதல் பயனாளிகளுக்கு உரிமைத் தொகை வழங்க நிதி எங்கிருந்து கிடைக்கும்? அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும்? என்பன உள்ளிட்ட வினாக்களுக்கு தமிழக அரசு விடையளிக்க வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
PMK Ramadoss Condemn to DMK Govt MK Stalin Urimai Thokai