செஞ்சிக்கோட்டையை மராட்டியர்களின் கோட்டை என்பதா? திட்டமிட்டு ஏமாற்றும் சதி வேலை - டாக்டர் இராமதாஸ் கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


பாமக நிறுவனர்- தலைவர் மருத்துவர் இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், "காடவ மன்னர்கள் கட்டிய கோட்டையே செஞ்சிக் கோட்டை. யுனெஸ்கோ நிறுவனம், மகாராஷ்டிர மன்னன் சிவாஜி கட்டிய 12 கோட்டைகளில் ஒன்றாக விழுப்புரம் மாவட்டத்து செஞ்சிக்கோட்டையை அடையாளப்படுத்தி இருப்பது வரலாற்றை சிதைக்கும் கொடுஞ்செயல். 

ஏற்கெனவே பல்வேறு காலகட்டங்களில் பாடநூல்களில், அகழாய்வுகளில் தமிழர்தம் அடையாளத்தை சிதைக்கும் பணியை சிரமேற்கொண்டு மத்திய அரசு செய்து வந்திருக்கிறது. கடும் எதிர்ப்பு காரணமாக ஓரிரு அம்சங்கள் மாற்றப்பட்டிருந்தாலும், முழுமையாக அவற்றை மாற்ற வில்லை; முழுமையாய் அவற்றை மாற்றித் தீரவேண்டிய அந்தப் பணியே இன்னும் நமக்கு மிச்சம் இருக்கிறது.

கவிச் சக்கர வர்த்தி ஓட்டக் கூத்தர், கி.பி.12-ஆம் நூற்றாண்டில் இயற்றிய மூவருலாவில் இடம்பெற்றிருக்கும் ‘விக்கிரம சோழன் உலா பாடல்-80’ தெளிவாகவே, உண்மையை, சான்றாக எடுத்தியம்புகிறது. “கடியரணச் செம்பொற் பதணஞ் செறியிஞ்சிச் செஞ்சியர்கோன் கம்பக் களியானைக் காடவனும்” என்ற வரிகளில் காடவன் எனும் கோன் (அரசன்) காணலாம். நெருங்கிய மதில்களை கொண்ட வலிமையான கோட்டையும், அந்தக் கோட்டைத் தூண்களில் கட்டப்பட்டிருக்கும் மத யானைகளையும் (போர் படை யானைகள்) கொண்ட செஞ்சியின் அரசனான காடவன் என்று விக்கிரம சோழன் உலா கூறுகிறது.

விக்கிரம சோழன் உலா குறிப்பிடும் “செஞ்சியர் கோன் காடவன்” (செஞ்சியின் அரசனான காடவன்) என்பவர் விக்கிரம சோழன் காலத்தில் (கி.பி. 1118 - 1135) வாழ்ந்த “ஆட்கொள்ளி காடவர் கோன்” என்பவர் ஆவார். இவரைப் பற்றியும் இவரின் தந்தை மற்றும் இரண்டு மகன்கள், பேரன் பற்றியும் விருதாசலம் மற்றும் திருவெண்ணெய் நல்லூர் சோழர் கால கல்வெட்டுகள் (S.I.I. Vol-XII Nos.263 & 264) கூறுகின்றன. இவரின் மூத்த மகனின் பெயர் : “எறும்பூர் காணியுடைய பள்ளி ஆளப்பிறந்தான் ஏழிசை மோகனான குலோத்துங்கசோழக் காடவராதித்தன்” (S.I.I Vol-VII No.150)

“கூடலூர் பள்ளி ஆளப்பிறந்தான் மோகனான குலோத்துங்கசோழ கச்சியராயன்” (S.I.I Vol-VII No.1004) இளைய மகன் கச்சியராயனுக்கு “அரச நாராயணன் கச்சியராயனான காடவராயன்” என்ற பெயர் உள்ளிட்ட பட்ட பெயர்கள் உள்ளன. செஞ்சிக்கோட்டை காடவ மன்னர்களின் வலிமையான கோட்டை என்று கவிச் சக்கரவர்த்தி ஓட்டக்கூத்தர் விக்கிரம சோழன் உலாவில் குறிப்பிட்டதை வரலாற்று அறிஞர் நீலகண்ட சாஸ்திரி எழுதிய சோழர் பற்றிய புத்தகத்தில் கீழ்கண்டவாறு பதிவு செய்திருக்கிறார்:

"The Kadava who rode a rutting elephant and was Lord of the Senjiyar of the strong embattled fortress" (K.A. Nilakanta Sastri, The Cholas - page 347). அறிஞர் பெருமகன் வி. கனகசபை பிள்ளையும் விக்கிரம சோழன் உலாவில் குறிப்பிடப்படும் செஞ்சிக்கோட்டையின் அரசனான காடவன் பற்றி கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்: "Kadavan, the king of the hill-fort of Senji. As Kadavan, 'the forester', is a Tamil synonym of the Sanskrit Pallava, he appears to have belonged to the Pallava royal family. His fortress Senji, which is spelled Gingee in English, belongs to the modern South Arcot district" (Indian Antiquary Vol-XXII, page-143)

“எறும்பூர் காணியுடைய ‘பள்ளி’ ஆளப்பிறந்தான், ஏழிசை மோகனான குலோத்துங்க சோழக் காட வராதித்தன்” என்கிற வரிகள் போதாதா? காடவராதித்தனுக்கு “நாலுதிக்கும் வென்றாரான ஏழிசைமோகன் காடவராயர்” என்ற பெயர் உள்ளிட்ட பல பெயர்கள் உள்ளன. ஆட்கொள்ளி காடவ மன்னனின் இளைய மகன் பெயர், ‘கூடலூர் பள்ளி ஆளப்பிறந்தான் மோகனான குலோத்துங்க சோழ கச்சியராயன்’ என்பதாகும். இளைய மகன் கச்சியராயனுக்கு ‘அரச நாராயணன் கச்சியராயனான காடவராயன்’ என்ற பெயர் உள்ளிட்ட பல பெயர்கள் (இவருக்கும்) உள்ளன.

வன்னிய குலத்தில் தோன்றிய காடவ அரசர்கள் என்போர், சோழர்களின் உறவினர் ஆவர். இதுதான் அடிப்படையான சான்றுகளைக் கொண்ட வரலாறு ஆகும். ‘செஞ்சிக்கோட்டை, காடவ மன்னர்களின் வலிமையான கோட்டை’ என்று கவிச் சக்கரவர்த்தி ஓட்டக்கூத்தர், விக்கிரம சோழன் உலாவில் குறிப்பிட்டதை வரலாற்று அறிஞர் நீலகண்ட சாஸ்திரி எழுதிய சோழர் பற்றிய புத்தகத்தில் கீழ்கண்டவாறு பதிவு செய்திருக்கிறார். அந்தப் பதிவில், இப்படி கூறுகிறார்:

"The Kadava who rode a rutting elephant and was Lord of the Senjiyar of the strong embattled fortress" (K.A. Nilakanta Sastri, The Cholas - page 347) நீலகண்ட சாஸ்திரியவர்கள் காட்டும் ஆதாரங்களும், கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தரின் விக்கிரமன் சோழ உலாவும், விருதாசலம் மற்றும் திருவெண்ணெய் நல்லூர் சோழர்கால கல்வெட்டுகளும் ஐயத்திற்கு இடமின்றி செஞ்சிக் கோட்டையை நிர்மாணித்தவர் ‘காடவன்’ என்றுதான் கூறுகிறது.

தஞ்சை பெரிய கோயிலை சோழர்கள் நிர்மாணித்தனர். அதன் பிறகு அந்த கோயில் பாண்டியர், தஞ்சை நாயக்கர், மராட்டியர் உள்ளிட்டவர்களின் அரசாட்சியின் கீழ் வந்தது. இதுபோலவே, செஞ்சிக் கோட்டையை, ‘காடவர்கள்’ கட்டினர். அதன் பிறகு அந்த கோட்டை செஞ்சி நாயக்கர், மராட்டியர், நவாப், பிரெஞ்சு, ஆங்கிலேயர் உள்ளிட்டவர்களின் அரசாட்சியின் கீழ் வந்தது.

தஞ்சை பெரிய கோயில் சோழர்களின் கோயில் என்று அறியப்படுவதைப் போல, செஞ்சிக்கோட்டையும், காடவ மன்னர்களின் கோட்டை என்று வரலாற்றில் அறியப் படவேண்டும், அப்படித்தான் அறியப்பட வேண்டும்; அதுதான் நேர்மைத்தன்மையும், வழுவா நீதியும், மாறா தர்மமும் ஆகும். செஞ்சிக்கோட்டையை மராட்டியர்களின் கோட்டை என்று கூறுவது வரலாற்றுப் பிழை மட்டுமல்ல, அடுத்தத் தலைமுறையை திட்டமிட்டு ஏமாற்றும் சதி வேலையாகும்.

இந்த வரலாற்று பிழையை வலிந்து உண்டாக்கியது யார்? உலக புராதன - பாரம்பரிய நினைவுச் சின்னங்களை அங்கீகரிக்கும் பன்னாட்டு அமைப்பான யுனெஸ்கோவுக்கு இப்படிப்பட்ட முறைகேடான தகவல்களை வலிந்து கொடுத்தது யார்? உலகளாவிய பன்னாட்டு நிறுவனமான யுனெஸ்கோ, இதில் மறைந்திருக்கும் சதி வேலையையும், பொய் புரட்டையும் ஆராயாமல் எப்படி அங்கீகரிப்பை முன்னெடுத்தது?

யுனெஸ்கோ அங்கீகாரம் என்றாலே ஒரு மரியாதையும், நம்பகத் தன்மையும் இருக்குமே, அது முற்றாக ஒழியட்டும் என்றே யுனெஸ்கோ இப்படியான அறிவிப்புக்கு முன்வந்ததா? நாடு தேடி வீடு தேடி ஒரு பெருமை வந்து சேர்வதால், மகாராஷ்டிர அரசுக்கு இதில் மகிழ்ச்சி இருக்கலாம்; தமிழ்நாட்டு சொந்தங்களின் மகிழ்ச்சியும், நிம்மதியும் பறிபோயுள்ளதே அதற்கு என்னதான் தீர்வு?

காடவ மன்னன் காலத்துக்குப் பின்னே பலர் செஞ்சியை ஆள்வது - ஆண்டது வழமையான ஒன்றுதானே? விஜயநகர பேரரசுகள், நாயக்க மன்னர்கள் ஆண்டனர். அதன் பின்னே பீஜப்பூர் சுல்தானிடம் நாயக்க மன்னர்கள் வீழ்ந்து போக - அடுத்ததாக பீஜப்பூர் சுல்தான்களோடு போரிட்டு மாமன்னர் சிவாஜி, செஞ்சியை மீட்டதும், அப்படி மீட்ட குறுகிய ஆண்டுகளிலேயே அவர் இறந்து போனதும்தானே வரலாற்றில் பதியப்பட்டிருக்கிறது.

செஞ்சிக்கோட்டையை மாமன்னர் சிவாஜியோ, பிற மன்னர்களோ, அரசர்களோ, கட்டி காப்பாற்றினார்கள் என்று எந்த கல்வெட்டுச் சான்றும் பாடல்கள் சான்றும் இல்லையே!

மாமன்னர் சிவாஜியின் மகனென அறியப்பட்ட ராஜாராம், தந்தைக்கு அடுத்து செஞ்சிக் கோட்டையில் நுழைந்த கொஞ்ச நாள்களிலேயே மொகலாய பேரரசன் அவரங்கசீப்பிடம் மோத முடியாமல் சரண் அடைந்துள்ளார். மொகாலய ஆளுநர் சொரூப்சிங் என்பார், கொஞ்சகாலம் செஞ்சியை நிர்வாகம் செய்துள்ளார், அவருடைய மகன்தான் தேஜ்சிங் என்கிற தேசாங்சிங்.

இந்த ஆளுநர் மகனான தேசாங் சிங்கைத்தான் மக்கள் அறியாமையில், தேசிங்குராஜா என்றழைத்து, அவரும் வரலாற்றில் தமிழ் மாமன்னன் போல தோற்றம் பெற்று விட்டார். 22 வயதிலேயே வயதுக்கும் தகுதிக்கும் மீறி ஆட்சி அதிகாரம் என்று தனக்கான இடத்தை தகப்பன் மூலம் பிடித்து விட்டாலும், போதிய பக்குவம் இல்லாததால் 22 வயதிலேயே ஆற்காடு நவாப் படையிடம் மோதி ஒரு மணி நேரத்திலேயே சிறை பிடிக்கப்பட்டு சின்னா பின்னமாகிப் போனான்.

இவையெல்லாம் வார்த்தைக்கு வார்த்தை வரலாறு. இந்த வரலாற்றின் எந்தப் பக்கத்திலும், தமிழனான ‘காடவ’ மன்னர்கள் கட்டியதே செஞ்சிக்கோட்டை என்ற தரவு தவிர்த்து வேறொன்றை நான் பார்க்கவில்லை.

செஞ்சிக்கோட்டையை யுனெஸ்கோ அங்கீகரித்து விட்டதை அரசியல் கட்சித் தலைவர்கள் பாராட்டி விட்டுப் போயிருந்தால் வருத்தமில்லை. மராட்டிய மாமன்னன் சிவாஜியின் 12 கோட்டைகளில் ஒன்று என செஞ்சிக்கோட்டையை அங்கீகரித்துள்ளதை வரவேற்றிருப்பதுதான் வேதனை அளிக்கிறது. யார் அதை செய்திருந்தாலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதை செய்திருக்கக் கூடாது” என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PMK Ramadoss Condemn to DMK Govt Mk STalin Ginji Kottai issue


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->