புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்., அறிவிப்பை வெளியிட்ட பாமக தலைவர் ஜி.கே. மணி.!
PMK new District Secretaries
பாட்டாளி மக்கள் கட்சிக்கு புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக, ஆட்ச்சியின் தலைவர் ஜி.கே. மணி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சியை வலுப்படுத்தும் நோக்கத்துடன், கட்சியின் நிர்வாக அமைப்பில் பல்வேறு மாற்றங்களைச் செய்வதென கடந்த 16.10.2021 அன்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா, பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அமைப்புத் தீர்மானத்தில், ‘‘பாட்டாளி மக்கள் கட்சியின் விதி எண் 10&இல் திருத்தம் செய்யப்பட்டு, மாவட்ட அளவில் மாநில துணைப் பொதுச்செயலாளர் பதவி கைவிடப்படுகிறது. இனி கட்சி ரீதியிலான மாவட்ட அமைப்பு மாவட்ட செயலாளரின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும். இந்த ஒரு மாற்றத்தைத் தவிர மாவட்ட அளவிலான நிர்வாக அமைப்பு முன்பிருந்த நிலையிலேயே தொடரும்’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்படி பாட்டாளி மக்கள் கட்சியின் அமைப்பு ரீதியிலான மாவட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளராக எஸ்.பி. வெங்கடேஸ்வரன் (தருமபுரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்) அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார். தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு ஆகிய தொகுதிகள் தருமபுரி மேற்கு மாவட்டத்தில் அடங்கும்.

அதேபோல், சேலம் மாநகர் மாவட்ட செயலாளராக இரா. அருள் ( சேலம் மேற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்) அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார். சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு ஆகிய தொகுதிகள் சேலம் மாநகர் மாவட்டத்தில் அடங்கும்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா, பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. பா.ம.க.வின் பிற மாவட்டங்களுக்கான மாவட்ட செயலாளர்கள் விவரம் அடுத்தடுத்த நாட்களில் வெளியிடப்படும்." என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
PMK new District Secretaries