இப்போதுள்ள நகைக்கடன் விதிகள் முறையே தொடர வேண்டும் - அன்புமணி இராமதாஸ்!
PMK Anbumani Ramadoss RBI Gold Loan
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக்கடன் வழங்குவதற்கான 9 வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய வரைவு விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்த நிலையில் அவற்றில் இரு தளர்வுகளை செய்யும்படி மத்திய நிதியமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
புதிய விதிகள் நடைமுறைக்கு 2025-ஆம் ஆண்டு வரை செயல்படுத்தக்கூடாது; ரூ.2 லட்சம் வரையிலான நகைக்கடன்களுக்கு இந்த விதிகளில் இருந்து விலக்களிக்கப்பட வேண்டும் என்பது தான் அந்த பரிந்துரைகள் ஆகும். இவை போதுமானவை அல்ல என்று பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், "இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வரைவு விதிகளுக்கு இன்னும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை; அவை இன்னும் இறுதி செய்யப்படவில்லை; அவை எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இத்தகைய சூழலில் 2026 ஜனவரி ஒன்றாம் தேதி முதல் புதிய விதிகளை செயல்படுத்தலாம் என்பது சலுகை அல்ல.
அதேபோல், கிராமப்புறங்களில் கல்வி, குடும்பத் தேவைகள் மற்றும் வங்கிக் கடன் பெற முடியாத பல தேவைகளுக்கு நிதி ஈட்டுவதற்கான ஒரே வாய்ப்பு நகைக்கடன் தான். அவ்வாறு கடன் பெறும் போது ரூ.2 லட்சம் வரையிலான கடன்களுக்கு மட்டும் புதிய விதிகளில் இருந்து விலக்கு என்பது பயனளிக்காது.
இவை அனைத்தையும் விட பாட்டாளி மக்கள் கட்சி எழுப்ப விரும்பும் வினா என்னவென்றால், புதிய விதிகளை நடைமுறைப்படுத்துவதற்கான தேவை எங்கிருந்து வந்தது? ஒவ்வொரு தனிநபரும் எவ்வளவு நகைக்கடன் பெறுகிறாரோ, அதை விட குறைந்தது 40% கூடுதல் மதிப்பு உள்ள நகைகளை ஈடாக வைக்கிறார். நகைக்கடனை குறித்த காலத்தில் செலுத்தத் தவறினால் அவற்றை ஏலத்தில் விட்டு பணமாக்கவும் விதிகளில் வகை செய்யப்பட்டிருக்கிறது. அவ்வாறு இருக்கும் போது புதிய விதிகள் தேவையற்றவை. அதனால், எந்த பயனும் இல்லை, பாதிப்புகள் தான் அதிகம்.
தங்க நகைக்கடன் என்ற தத்துவமே நடைமுறை சிக்கல்கள் இல்லாமல் எளிதாக கடன் வாங்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது தான். புதிய விதிகளின் மூலம் அதை சிக்கலாக்கக்கூடாது. எனவே, நகைக்கடன்கள் தொடர்பாக இப்போதுள்ள நடைமுறைகளே தொடர வேண்டும். அது சாத்தியமில்லை என்றால், வரைவு விதிகளின் பிரிவுகள் 2, 4, 6 ஆகியவற்றை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
English Summary
PMK Anbumani Ramadoss RBI Gold Loan